News Just In

1/30/2020 09:38:00 PM

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நுளம்பு தாக்கத்தை விரைவாக கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது .

குறித்த டெங்கு ஒழிப்பு திட்டத்தினை சகல அரசத் திணைக்களங்கள், முப்படையினர், பொலிசார் மற்றும் பொதுநல அமைப்புக்களும் இணைந்து அமுல்படுத்தவுள்ளன.

மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் திருமதி கிரேசி நவரட்ணராஜா மேற்பார்வையில் சகல பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

டெங்கு நோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மண்முனை வடக்கு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு குறித்த டெங்கு ஒழிப்பு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன் டெங்குநோய்த் தாக்கத்துக்கு உள்ளான பொது வைத்திய சுகாதார பிரிவுகளிலும் இத் திட்டம் ஒரே நாளில் அமுல்படுத்தப்படவுள்ளது.

டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களில் பாரிய துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதுடன் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக இருக்கும் பொது நிறுவனங்கள், அரசதிணைக்களங்கள், மற்றும் அரச பாடசாலைகள், தனியார் பிரத்தியேக படிப்பு நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள்

தீவிர பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு டெங்கு நுளம்பு பெருகுவதனை கட்டுப்படுத்துவதில் அசமந்தப் போக்கினை கடைப்பிடிக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூப ரஞ்சனி முகுந்தன்,

பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் திருமதி கிரேசி நவரட்ணராஜா, உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன் உட்பட அரச திணைக்களங்களின் உள்ளூர்த் தலைவர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலரும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

No comments: