நாட்டின் 31 மாகாண மட்டத்திலான பிராந்தியங்கள் இந்த கொடிய வைரசின் பிடியில் சிக்கியுள்ளன.இந்த வைரஸ் தாக்கியவர்கள் ஒருவித நிமோனியா காயச்சலுக்கு உள்ளாகி மரணத்தை தழுவி வருகின்றனர்.
இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்து அரசையும், மருத்துவத்துறையையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன.
கொரோனா வைரஸ் தாக்குதல் விரைவில் உச்சக்கட்டத்தை எட்டும் என கொரோனா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாக குழுவின் தலைவர் ஜோங் நன்ஷான் கூறுகையில், 'கொரோனா வைரசின் தாக்கம் எப்போது உச்சக்கட்டத்தை அடையும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். எனினும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் உச்சக்கட்டத்தை எட்டும் என நினைக்கிறேன்.
பின்னர் அதிக அளவில் நோய் பரவும்' என்றார். இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு 3 அல்லது 4 மாதங்கள் வரை ஆகும் எனவும், வைரசை அழிப்பதற்கான மருந்துகளை உருவாக்கவும் சில காலம் பிடிக்கும் என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே சீனாவில் வசித்து வரும் தங்கள் நாட்டினரை மீட்கும் நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் தொடங்கி உள்ளன. இவ்வாறு மீட்பு நடவடிக்கைகளை விரும்பும் நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார் என சீனா அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, வூஹான் மற்றும் ஹபெய் மாகாணத்தில் வசித்து வரும் அனைத்து நாட்டு குடிமக்களின் உயிரையும், நலத்தையும் பாதுகாப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது.
அங்கிருந்து தங்கள் நாட்டினரை வெளியேற்றுமாறு எந்த நாடும் கேட்டுக்கொண்டால் சர்வதேச நடைமுறைகளின்படி அதற்கான உதவியை சீனா அளிக்கும்' என்று தெரிவித்தார்.
கொரோனா வைரசின் தாக்கம் குறையும் வரை சீனாவுக்கு விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள சீனாவுக்கு சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது. சீனாவிலும், உலக அளவிலும் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதே தங்களின் உயர்ந்தபட்ச நோக்கம் ஆகும் என அந்த அமைப்பின் தலைவர் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.

No comments: