முன்னாள் போராளியான கணவன் மனைவியால் தாக்கப்பட்டதில் கணவன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மனைவி மகள் மகன் ஆகியோருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பவாக ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிஸார் கொல்லப்பட்டவரின் மனைவி, மகள், மகன் ஆகியோரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் ஆஜர் செய்தபோது சந்தேக நபர்களை டிசெம்பெர் 13ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்;டார்.
மட்டக்களப்பு, கிரான் கோரகல்லிமடு முருகன் கோவில் வீதியை அண்டியுள்ள வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த இந்தக் கொலைச் சம்பவத்தில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ இயக்கப் போராளியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான பிள்ளையான் பாலசுப்பிரமணியம் (வயது 49) என்பவரே கொல்லப்பட்டிருந்தார்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற தகராறையடுத்து மனைவி கணவனை தேங்காய்த் துருவலையால் தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


No comments: