கிளிநொச்சி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையிலான நான்காம் சுற்று சந்திப்பு கிளிநொச்சி விவேகானந்த நகரில் இடம்பெற்றது.
முன்னாள் போராளிகளை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து, அவர்களின் எதிர்கால அரசியல் பங்களிப்பை வலுப்படுத்துவதுடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினூடாக அவர்களுக்கு உரிய அரசியல் தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதித்துவத்தை வழங்குவது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் குறித்தும், எதிர்காலத்தில் அவர்களை அரசியல் செயற்பாடுகளில் மேலும் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
முன்னாள் போராளிகளின் அனுபவங்களும், அவர்கள் சமூகத்திற்கு வழங்கி வரும் பங்களிப்புகளும் தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை என இதன்போது வலியுறுத்தப்பட்டது. அவர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான பயணத்தில் அவர்களையும் முழுமையாக இணைத்துக்கொள்வதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
கிளிநொச்சி போராளி நலன்புரி சங்கத்தின் தலைவர் ரொபின், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சிறீதரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அத்துடன், கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் சந்திப்பில் பங்கேற்று, தங்களுடைய கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களை பகிர்ந்துகொண்டனர்.
முன்னாள் போராளிகளுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான இந்தக் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மேலும், முன்னாள் போராளிகளின் அனுபவங்களையும் ஆற்றலையும் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுடன், அவர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான முயற்சிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: