News Just In

11/21/2019 09:13:00 PM

அரசியல் தலைவர்கள் மனதில் மாற்றமில்லையேல் நிறங்களிலும் மாற்றமில்லை!

(லக்ஸ்மி)
காலாகாலமாக எந்த தேர்தல் வந்தாலும் இறுதி தேர்தல் முடிவானது இணைக்கப்பட்டுள்ள படங்களில் உள்ளவாறே நிறம் தீட்டி வெளிவரும்.
இந்த நிறம் தீட்டலின் வெளிப்பாடு என்னவெனில் தேர்தல் காலங்களில் பெரும்பான்மையினரது மனநிலையிலும் மாற்றமில்லை. சிறுபான்மையினரது மனநிலையிலும் மாற்றமில்லை. அதேபோல ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்களினது மனநிலையிலும் மாற்றமில்லை என்பதையே காட்டுகிறது.

ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் ஆட்சி அமைப்பவர்களும் எதையாவது செய்யவேண்டும் என்று சிறு முயற்சிகளை எடுப்பார்கள். அதன்போது சிறுபான்மையினருக்கு ஒரு நம்பிக்கை ஒளி பிறக்கும். ஆனாலும் அந்த ஒளியானது எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளாலும் சிறுபான்மையினரின் குழப்பவாதிகளாலும் இருளாகவே மாற ஆரம்பிக்கும்.

இறுதியாக தேர்தல் நெருங்கும் காலத்தில் எதிர்க்கட்சிகள் தாங்கள் வெற்றி பெறுவதற்காக இனவாதத்தை தூண்டி வாக்கு பெற ஆரம்பிக்கும். அதன்போது சிறுபான்மைகள் அதை காரணம் காட்டி எதிராக வாக்களிக்க தயாராகும். இதன் முடிவு இந்த நிறம் தீட்டலாக அமையும்.

அல்லது ஆளும் கட்சி வாக்குகளை பெற இனவாதத்தை பேசும். அதைப்பார்த்த சிறுபான்மைகள் எதிர்க்கட்சியை கொண்டுவர வாக்களிக்கும். அப்போதும் இதே நிறம் தீட்டலே முடிவாக அமையும்.

இதற்கு காரணம் நம் தமிழ் மக்களும்தான் அதாவது எந்த ஆட்சி உள்ளதோ அந்த ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தமிழர் எவரும் வருவதில்லை. வர விடுவதும் இல்லை.

அப்படி யாராவது வர முனைந்தால் வாக்கை பிரிக்க போகிறான் துரோகி என்று பட்டம் கட்டி அவனுக்கு வரவிருக்கும் வாக்குகளை நம்மவர்களே கெடுத்து விடுவார்கள். பின்னர் முடிவில் உண்மையிலேயே அவனுக்கு வாக்கு குறைந்து அந்த வாக்குகளில் முஸ்லிம் பிரதிநிதிகளும் தேர்வாகி விடுவதே வழமை.

ஆனாலும் பெரும்பான்மை கட்சிகளில் உள்ள தமிழ் அமைப்பாளர்களும், உறுப்பினர்களும் எதிர்க்கட்சியாக உள்ளபோதோ அல்லது ஆளும்கட்சியாக உள்ளபோதோ மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செய்வதும் இல்லை.

ஆனால் சரியாக திட்டமிட்டு தமிழர்கள் செயல்பட்டால் ஒரு தமிழ் பிரதிநிதியை ஆளும் கட்சியில் தேர்வாக வைத்து அனுப்பி நன்மையடையலாம். எது எவ்வாறோ நாட்டில் அரசியல்வாதிகள் அரசியல் லாபம் தேடவேண்டுமானால் இதேபோல தேர்தல் முடிவு வரும் வகையில் தமது இனவாத கருத்துக்களை விதைத்தாலே முடியும்.

உண்மையில் தேர்வாகும் அரசும் அரச உறுப்பினர்களும் நாட்டின் நலன்சார்ந்து சிந்தித்து இன நல்லுறவை வளர்க்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு இலங்கை பூராகவும் ஒரே கருத்துக்களை பேசி இளைஞர் யுவதிகளுக்கு நாட்டுப்பற்றை வளர்க்கும் செயல்பாடுகளை முன்னெடுத்து

அரசியல், பொருளாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை சமமாக தகுதி அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் வழங்கி, அனைத்து இன மக்களினதும் கருத்து மற்றும் மத அனுஷ்டானங்கள் கொள்கைகளுக்கு இடம்கொடுத்து, அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கி சகல மாகாணங்களுக்கும் அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்வார்களாயின் மாத்திரமே

ஒரே நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகார பரவலாக்கத்தோடு சகல இன மக்களும் ஒரே நாடு ஒரே கொள்கை என்ற சிந்தனையோடு வாழ பழகி சுதந்திரமான சுபீட்சமான நாட்டை கட்டி எழுப்பி பொருளாதார ரீதியிலும் நம் நாட்டை கட்டி எழுப்புவதோடு வரும் தேர்தல்களிலும் இந்த நிறம் தீட்டலையும் மாற்றி அமைக்கலாம்.

No comments: