News Just In

11/28/2019 08:00:00 AM

இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை

இன்று வழங்கப்பட்டிருக்கும் இப்பதவிகள் சிறப்புரிமைகள் அல்ல, அவை மிக முக்கிய பொறுப்புக்களாகும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாட்டு மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனேயே மிகப்பெரும் மக்கள் ஆணையை எமக்கு பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அரசியலமைப்பில் உள்ள வரையறைகளின் காரணமாக இன்று இந்த பதவிகளை வழங்குவதில் பெரும்பாலும் எமக்காக உழைத்த, அதேபோன்று அதிக வாக்குகளைப் பெற்றுத்தந்த அனைவருக்கும் பதவிகளை பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இல்லை.

இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அமைச்சர்களின் எண்ணிக்கையைப் போன்று குறைப்பதற்கு நான் விரும்பினாலும், எமது கொள்கை பிரகடனத்தை பார்க்கின்றபோது நாம் நிறைவேற்றுவதற்கு ஏராளமான பொறுப்புக்கள் உள்ளன. எனவேதான் நான் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை அவ்வாறே முழுமையாக வைத்துக்கொள்வதற்கு தீர்மானித்தேன்.

சிலவேளை தமக்கு கிடைத்திருக்கும் அமைச்சுப் பதவிகள் குறித்து சந்தேகம் ஏற்படக்கூடும். பெயர் எதுவானாலும் அவற்றுக்கான பொறுப்புக்கள் பாரியவை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த வகையிலேயே நாம் இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளை அமைத்திருக்கிறோம்.

எனது பல வருட அனுபவத்திலும், அதுபோன்று குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போது அந்தந்த பிரதேசங்களில் கண்ட மக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்காகவே இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மக்களின் தேவைகளை கவனத்திற்கொண்டு நாம் இந்த அமைச்சுக்களை ஒதுக்கியிருக்கிறோம்.

உதாரணமாக புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சை எடுத்துக்கொண்டால், இன்று புகையிரத சேவைகளுக்கு நாட்டில் பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. அது முன்னேற்றப்பட வேண்டிய ஒரு துறையாகும். எனவேதான் இராஜாங்க அமைச்சொன்று அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று அதனை விரிவுபடுத்தவும் வேண்டும். அத்தோடு அதனை வினைத்திறனான சேவையாக மாற்றுவதும் அவசியமாகும்.

அதேபோன்று சுதேச மருத்துவ சேவைகளை கவனத்திற்கொள்ளும்போது, இந்த நாட்டில் உள்ளவர்களும் அதேபோன்று வெளிநாடுகளில் உள்ளவர்களும் இந்த சுதேச மருத்துவ சேவைகளை முன்னேற்றுவது பற்றி பேசினார்கள். குறிப்பாக அதனை சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று அத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமை குறைந்துள்ளது. அத்துறை அருகிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினைப் பற்றி ஆராய்ந்து தான் இராஜாங்க அமைச்சினை வழங்குவதற்கு நாம் தீர்மானித்தோம்.

அதேபோன்று சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, இந்த பெயரை குறிப்பிடும்போது சிலவேளை அது என்னவென்று சிந்திக்கலாம். வறுமை பற்றி நாம் குறிப்பிட்டிருக்கிறோம். எனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலும் எதிர்க்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வறுமையை ஒழிப்பது பற்றி அதிகம் பேசப்பட்டுள்ளது. அதற்கான தேவையுள்ளது. வறுமையை ஒழிக்கும் நோக்குடன் தான் இந்த அமைச்சை ஏற்படுத்தி இருக்கின்றோம். இது ஒரு மிகவும் முக்கியமானதொரு அமைச்சாகும்.

துரதிர்ஷ்டவசமாக மகளிர், சிறுவர்கள் விவகார இராஜாங்க அமைச்சை ஒரு பெண்ணுக்கு வழங்கக் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு முக்கியமான அமைச்சாகும். எமது கொள்கைப் பிரகடனத்தில் முக்கியமான பகுதியை அந்த அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்த முடியும்.

அதேபோன்று சுற்றுலா அபிவிருத்தியும் மிகவும் முக்கியமானதாகும். 10 பில்லியன் டொலர்கள் வரை சுற்றுலாத்துறையை முன்னேற்ற வேண்டியது அவசியமாகும் என நான் நினைக்கின்றேன். இது மிகவும் முக்கியமான பொறுப்புக்களைக் கொண்ட ஒரு அமைச்சாகும். இந்த அனைத்து அமைச்சுக்களும் இவ்வாறு சிந்தித்தே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இராஜாங்க அமைச்சர்களுக்கும் பிரதி அமைச்சர்களுக்கும் தமது கடமைகளை செய்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்குமாறு நான் அமைச்சர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். நான் அன்றும் அது பற்றி நினைவூட்டினேன். எனவே அந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு பொறுப்புக்களை வழங்குமாறு நான் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இராஜாங்க அமைச்சர்களுக்கு செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். எனவே அந்த பொறுப்புக்களை ஏற்று நடைமுறைப்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். இது சிறப்புரிமைகள் அல்ல என்பதை நான் மீண்டும் ஒரு முறை நினைவுப்படுத்துகின்றேன். இது எம்மனைவருக்கும் மக்கள் வழங்கியிருக்கும் முக்கியமான பொறுப்பாகும். அந்த பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

எமக்கு பெரும் சவால்கள் உள்ளன. அரச துறையில் சிறந்த அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களை வலுவூட்டி அரச துறையை செயற்திறனானதாக மாற்றி மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி நாட்டை புதியதோர் யுகத்தை நோக்கி கொண்டு செல்லுமாறு இராஜாங்க அமைச்சர்களிடமும் பிரதி அமைச்சர்களிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிகள் கிடைக்கப்பெறாவிட்டாலும் அவர்களுக்கு செய்ய முடியுமான பொறுப்புக்கள் உள்ளன என்று நான் நினைக்கின்றேன். அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் உரிய முறையில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். குறிப்பாக அரச சேவையை செயற்திறனாக மாற்றும் மிகவும் முக்கியமான பணி உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன். நேற்று அமெரிக்காவிலிருந்து இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தந்திருந்த ஒருவர் அவரது ஒரு தேவையை செய்து கொள்வதற்காக ஒரு நிறுவனத்திற்கு சென்றபோது இரண்டாம் மாடியில் இருக்கும் பணிப்பாளரிடம் சென்று அனுமதி பெற்று வாருங்கள் என கூறப்பட்டுள்ளது.

அவர் கீழே வந்து பார்த்து விட்டு மீண்டும் வந்து அங்கு ஒரு பணிப்பாளரும் இல்லை என்று கூறியதும் பணிப்பாளரின் அனுமதியின்றி அதனைச் செய்ய முடியாதெனக் கூறப்பட்டுள்ளது. அவர் என்னைச் சந்தித்து இப்படியான நிலைமையே காணப்படுகிறது. தயவு செய்து இந்த நிலைமையை மாற்றுங்கள் எனக் குறிப்பிட்டார். இவ்வாறான நிலைமை சில அரச நிறுவனங்களில் ஏற்பட்டிருப்பது கவலைக்குரியதாகும்.

மக்களுக்கு சேவை செய்வதற்கான அரச நிறுவனங்களை செயற்திறனானதாக மாற்றுவது உங்கள் பொறுப்பாகும். நாம் அந்த பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவோம். நாம் அனைவரையும் வலுவூட்டி முன்னெடுத்துச் சென்று மக்களுக்கு சேவை செய்வோம் எனக்கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

No comments: