News Just In

11/30/2019 08:20:00 AM

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது தாக்குதல்!

அம்பாறை, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பரீட்சையின்போது சிறு குறிப்புகள் எழுதப்பட்ட துண்டுகளை பார்த்து எழுத அனுமதிக்காத பரீட்சை மேற்பார்வையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (29.11.2019) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது....
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சைகள் கடந்த 25ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

மொத்தமாக 218 மாணவர்கள் தத்தமது பிரிவுகளுக்கான பரீட்சைகளை எழுதும் நிலையில், அங்கு வேறு கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 12 பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில், வெள்ளிக்கிழமை (29.11.2019) காலை 9.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாக முன்னர் சில மாணவர்கள் மறைத்து வைத்திருந்த சிறுகுறிப்பு துண்டுகளை (பிட்) பரீட்சை மேற்பார்வையாளர்கள் கைப்பற்றியிருந்தனர்.

எனினும், பரீட்சை நடந்து கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் மறைத்து வைத்திருந்த காகிதத் துண்டுகளை வெளியில் வைத்துக் கொண்டு, கேள்விகளுக்கான பதில்களை எழுதிக் கொண்டிருந்த நிலையில் குறித்த மாணவர் முறைகேடு செய்வதைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அந்த மாணவரை பரீட்சை எழுத அனுமதிக்காத மேற்பார்வையாளர்கள் அவரை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர்.

இதனையடுத்து, சுமார் பகல் 12.00 மணியளவில் வந்த மேற்படி மாணவர் சச்சரவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கு வந்த சுமார் 30 பேரைக் கொண்ட குழுவினர் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பரீட்சை மேற்பார்வையளர் ஒருவரும், உதவி மேற்பார்வையாளர் இருவரும் காயமடைந்த நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் தலைக்கவசம் அணிந்து தமது முகத்தை மறைத்திருந்ததுடன் அவர்கள் தடிகள் கொண்டு தாக்கியதால் தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் இருவரின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், பரீட்சைக் கடமைகயில் ஈடுபட மேற்பார்வையாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும், திங்கட்கிழமை நடைபெறுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சையினை நடத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து சம்மாந்துறை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: