News Just In

11/18/2019 07:52:00 PM

அட்டாளைச்சேனைப் பகுதியில் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரொருவர் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.ஏ.ஆர்.ஆக்கிலா முன்னிலையில் இன்று (18.11.2019) ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த சந்தேகநபரை டிசம்பர் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
நவம்பர் 15ஆம் திகதி அட்டாளைச்சேனை கடற்கரை பிரதேசத்தில் தனது சகோதரி வீட்டுக்கு சென்று தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை ஆட்டோவில் வந்த சிறுமியின் உறவினரான சந்தேகநபர் வீட்டில் கொண்டு விடுவதாக ஆட்டோவில் ஏறுமாறு சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபரின் பேச்சினை நம்பி ஆட்டோவில் ஏறிய சிறுமியை கடத்தி அட்டாளைச்சேனை கடற்கரையில் உள்ள மீனவர் வாடியொன்றினுள் அழைத்துச் சென்று தேநீரை வற்புறுத்திக் குடிக்க வைத்துள்ளார். தேநீர் அருந்திய பின்னர் மயக்கமுற்ற சிறுமி அடுத்த நாள் (16 ஆம் திகதி) காலை மயக்கம் தெளிந்து வீடு வந்து நடந்த சம்பவத்தை தாயிடம் கூறியுள்ளார்.

சிறுமியின் தாயார் இது தொடர்பில் பள்ளிவாசல் நிருவாகத்திடம் முறையிட்டுள்ளார்.பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (17) சந்தேக நபரை கைது செய்து விசாரணையின் பின்னர் இன்று திங்கட்கிழமை (18) நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக சிறுவர் பெண்கள் பிரிவுக்கு பொறுப்பான அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.அன்சார் தெரிவித்தார்.
************
நீதிமன்றம் தொடர்பான செய்திகளுக்கு தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை VTN செய்திக் குழுமம் தடைசெய்துள்ளது என்பதனை தங்களுடைய மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

No comments: