2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, இன்ரபோல் தகவல் முறைமையினை நேரடியாக அணுகும் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்காக, 2019 ஒக்டோபர் 11ஆம் திகதி இலங்கைக்கான இன்ரபோல் தேசிய மத்திய பணியகத்துடன் (தேசிய மத்திய பணியகம், கொழும்பு) ஒப்பந்தமொன்றினை இலங்கை மத்திய வங்கியில் செய்து கொண்டது.
பணம் தூயதாக்கலும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலும் பன்னாட்டு ரீதியாக தொடர்புபட்ட நிதியியல் குற்றங்களாகும். இவை உலகளாவிய பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடும். இன்ரபோலுடனான ஒப்பந்தம் அத்தகைய குற்றங்களை தடுப்பதற்கும், கண்டுபிடிப்பதற்கும், வழக்கு தொடுப்பதற்கும் இன்றியமையாததாக விளங்கும் புலனாய்வு மற்றும் தகவல்களைத் திரட்டுவதற்கு நிதியியல் உளவறிதல் பிரிவினை இயலுமைப்படுத்தும்.
பணம் தூயதாக்கலுக்கெதிரான பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு நிதியியல் உளவறிதல் பிரிவு, 39 வெளிநாட்டு இணைத்தரப்பினருடனும் அதேபோன்று இலங்கைச் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், உள்நாட்டு அரசிறைத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், இலங்கைப் பொலிஸ், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தணை ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, உந்து ஊர்திகள் போக்குவரத்துத் திணைக்களம், கூட்டுறுதித் தொடர்மாடிமனை அதிகாரசபை மற்றும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை போன்ற பத்து உள்நாட்டு அரச முகவர்களுடனும் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்திருக்கின்றது.
No comments: