News Just In

10/31/2019 05:58:00 PM

புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்களுக்கான எச்சரிக்கை!

தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (31)  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். தற்பொழுது தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இந்த வாக்களிப்பை புகைப்படம் எடுத்து முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களில் தரவேற்றம் செய்வது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செயற்படும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றமிழைத்தவராக கருதப்படும் சந்தர்ப்பத்தில் 3 வருட கால சிறைத்தண்டணை விதிக்கப்படும். இதற்கு உதவி ஒத்தாசை வழங்குவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தற்பொழுது தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுவருவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று காலையில் இருந்து பெரும் எண்ணிக்கையிலாக ஊழியர்கள் வாக்களித்துள்ளனர்.

No comments: