News Just In

10/25/2019 09:55:00 AM

13 வது அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க முடியும் - ரணில்


அமரர் காமினி திசாநாயக்க நடைமுறைப்படுத்திய 13 வது அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அமரர் காமினி திசாநாயக்கவின் 25வது நினைவு தின நிகழ்வு கொழும்பு 7ல் அமைந்துள்ள அவரின் உருவச் சிலைக்கு அருகில் நேற்று (24) பிற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

எப்போதும் புதிய கருத்துக்களைக்கொண்ட காமினி திசாநாயக்க வரலாற்றை மாற்றியமைத்த நபர் என்று தெரிவித்த பிரதமர், பொருளாதாரம், விவசாயம், விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இவரினால் மாற்றம் கண்டதாக தெரிவித்தார்.

காமினி திசாநாயக்க எரிசக்தித்துறையை பலப்படுத்துவதற்காக கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே, மாதுளுஓயா உள்ளிட்ட 9 மின் நிலையங்களை அமைத்தார். ஆனால் இந்தக் காலப்பகுதியில் ஒரு மின்நிலையத்தை அமைப்பதற்கு 9 வருடங்கள் சென்றாலும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு அவர் திறமையானவர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய உரையாற்றுகையில், அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரையும் சமமாக மதித்த காமினி திசாநாயக்க அரசியல்வாதி என்பதையும் விட ஒரு ராஜதந்திரி என்பது பொருத்தமாகும் என்று தெரிவித்தார்.

தனது தந்தையின் தொலைநோக்கை முன்னெடுத்துச் செல்வதற்கு தனது சகோதரருடன் ஒன்றிணைந்து செயற்படுவதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க அங்கு குறிப்பிட்டார்.

No comments: