News Just In

1/20/2026 05:40:00 PM

வரலாற்று நூல் வெளியீடு

வரலாற்று நூல் வெளியீடு



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், பன்னூலாசியரும் கவிஞருமான மஸாஹிறா கனி எழுதியுள்ள இரு நூல்களின் அறிமுகம் நிகழ்வு ஞாயிறன்று 25.01.2026 அன்று புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்ட வளரி பன்னாட்டு பெண்கள் பேரமைப்பு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் விடத்தல்தீவு “புலவர் முஹம்மது காசிம் ஆலிம்” வரலாற்று நூலும் “வேரெழுது” கவிதைத் தொகுப்பு நூலும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

வளரி பன்னாட்டு பெண்கள் பேரமைப்பின் வடமேல் மாகாணத் தலைவி கவிஞர் குத்சியா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஆசியுரை, வாழ்த்துக் கவிதைகள், அனுபவப் பகிர்வு, நூல் நயவுரை என்பன இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். பைஷல், கல்விப் பணிப்பாளரும் பல்துறைசார் ஆய்வாளருமான எம். ஷன்ஹீர், புத்தளம் ஆசிரிய ஆலோசகர் விஜயலெட்சுமி, ஐ மீடியா நெற்வேர்க் பணிப்பாளரும் பொறியியலாளருமான எஸ்.ஏ.சி.பி. மரைக்கார், கல்விப் பணிப்பாளர் அஜிர் அஸ்ஹா, முன்னாள் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எம்.என். பரீட், முன்னாள் உதவி அரசாங்க அதிபர் எம்.என் முகுசின், முன்னாள் கல்விப் பணிப்பாளர் எம்.எச். வாஹித், இலக்கியவாதியும் முன்னாள் கல்விப் பணிப்பாளருமான ஜவாத் மரைக்கார், வளரி பன்னாட்டு பெண்கள் பேரமைப்பின் இலங்கைக்கான தலைவி கவிஞர் சிவகௌரி, எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், வைத்தியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உட்பட இன்னும் பல இலக்கிய ஆர்வலர்களும் முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

எழுத்தாளர் மஸாஹிறா, இதற்கு முன்னர் “வடதிசை” என்ற தலைப்பில் கவிதை நூல் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார்.

வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தனது குடும்பப் பாட்டனார் “புலவர் முஹம்மது காசிம் ஆலிம்” அவர்கள் சமூகத்தின் முதுசமாகவும் சொத்துக்களாகவும் ஆயிரக்கணக்கான வரலாற்று நூல்களைச் சேகரித்து வைத்திருந்ததோடு தானும் 10 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டும் பேணிப் பாதுகாத்து வந்திருந்தார். ஆயினும், பலவந்த வெளியேற்றம் எங்களது அறிவுக் கருவூலத்தையே அழித்தொழித்து விட்டது. அதனை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பணியை எதிர்கால சந்ததிக்கு ஒப்படைக்கும் ஒரு சுய முயற்சியாகவே தான் இந்த இலக்கிய செயற்பாட்டில் ஈடுபாடு கொண்டுள்ளதாக எழுத்தாளர் மஸாஹிறா தெரிவித்தார்.

No comments: