வெற்றிடமாகவுள்ள 120 இற்கு மேற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
நாடளாவிய ரீதியில் வெற்றிடமாகவுள்ள திடீர் மரண விசாரணை அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் வெற்றிடங்களாகவுள்ள சுமார் 120 இற்கு மேற்பட்ட பிரதேசங்களின் விவரத்தையும் விண்ணப்பப் படிவத்தையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் www.moj.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் அமைச்சின் இணைய தளத்தின் ஊடாக குறித்த நிகழ்நிலை (Online) விண்ணப்பப் படிவம் அல்லது வன் பிரதியை முறையாகப் பூர்த்தி செய்து 2026-02-05 ஆம் திகதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
மரண விசாரணை அதிகாரிகள் மரண விசாரணையை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவு மற்றும் அனுமதிக்கப்பட்ட பயணச் செலவு/இணைந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாளில் 27 வயதிற்குக் குறையாமலும் 65 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
க.பொ.த. (உ.தர) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் (சாதாரண பொதுப் பரீட்சை மற்றும் ஆங்கில பரீட்சை தவிர) சித்தியடைந்திருத்தல். (ஆங்கில மொழி அறிவு, தொழில்நுட்ப அறிவு மற்றும் க.பொ.த. உயர் தரத்தில் 03 உயிரியல் பாடங்களில் சித்தியடைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நீதிமன்ற விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்பட்ட எந்தவிதமான பதவியையும் வகிக்காதவராகவிருத்தல்.
1951ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராக சேவையாற்றாமலிருத்தல்.
விண்ணப்பதாரி அரசாங்க, மாகாண சபை நிதியத்தில் அல்லது உள்ளூராட்சி நிறுவனமொன்றின் நிதியத்திலிருந்து சம்பளம் அல்லது கொடுப்பனவைப் பெறும் நபர்கள், அரச கூட்டுத்தாபனம், கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அல்லது உள்ளுராட்சி நிறுவனங்களின் தோழர்கள், தனியார் துறையில் நிரந்தர சம்பளம் பெறுபவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: