(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
முதன்முறையாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் தமிழ் முஸ்லிம் மலையக சமூகத்தினரின் வாழ்வியல் சமூக உணர்வுகளைப் பிரபலிக்கும் “அபேதம்” என்ற தொனிப்பொருளில் சமாதான நல்லிணக்திற்கான நடமாடும் கண்காட்சிகள் நடத்தவிருப்பதாக தந்தை செல்வா நினைவு அறக்கட்டளையின் திட்ட வளவாளர் எஸ். திலீபன் தெரிவித்தார்.
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை, நிஸா அபிவிருத்தி நிலையம், சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனம், யுக சக்தி மகளிர் சம்மேளனம் ஆகியவை இணைந்து தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் சார் விடயங்களை வெளிப்படுத்தும் சமாதான நல்லிணக்திற்கான நடமாடும் கண்காட்சிகளை நடத்தவிருக்கின்றன.
அதன் முதலாவது கண்காட்சி முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிரூற்று சென். மத்தியாஸ் முன்பள்ளி மண்டபத்தில் எதிர்வரும். 17.01.2026 சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை இடம்பெறும்.
இரண்டாவது கண்காட்சி 24.01.2026 சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டம் - மலையாளபுரம், பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மூன்றாவது கண்காட்சி, யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையிலான சமாதான நல்லிணக்க நடமாடும் கண்காட்சிகள் பற்றி மேலும் தெரிவித்த அறக்கட்டளையின் திட்ட வளவாளர் திலீபன், கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமாதானக் கலையரங்கம், சமாதானம் தொடர்பாக சிந்திக்கின்ற முறைமைகளை உருவாக்குவதற்கான கலந்துரையாடலுக்கான ஒரு களமாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் களத்தை சமாதான ஆர்வலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சமாதானம் தொடர்பான எண்ணங்கள், சிந்தனைகள், பிரதிபலிப்புக்களை அங்கே கண்டு கொள்ளலாம். அந்தக் களத்தை, சமாதானத்தை நோக்கிய சிந்தனைகளுக்கு உயிரூட்டும் இடமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆர்வலர்களை கிளிநொச்சியிலுள்ள சிறிலங்கா பீஸ் கலரிக்கு வரவேற்கின்றோம்” என்றார்.
No comments: