(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
“தித்வா” சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, ஊடக சமூகத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 36 ஊடகவியலாளர்களுக்கான விரிவான நிவாரணத் திட்டத்தை சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பூர்த்தி செய்துள்ளதாக சிறி லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் தெரிவித்தார்.
கொழும்பு, கண்டி, புத்தளம், கம்பஹா, பதுளை, கேகாலை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடரினால் வாழ்வாதாரத்தையும் உடைமைகளையும் இழந்த ஊடகவியலாளர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இதற்கமைய துப்புரவுச் சாதனங்கள், உலருணவுப் பொதிகள், அத்தியாவசிய வீட்டுப் பாவனைப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், நிதி உதவிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிவாரணப் பணிக்கு கட்டார் சரிட்டியின் (Qatar Charity) இலங்கை அலுவலகம், ஜே.ஜே. பவுண்டேசன் தலைவர் முஹம்மத் ஹனீப், தொழிலதிபர் பீர்கான் றிஸ்வி ஆகியோர் பங்களிப்புகளை வழங்கியிருந்தனர்.
இடர் நிவாரணப் பணிகள் குறித்து மேலும் தெரிவித்த பைறூஸ்,
“இடர்ப் பாதிப்புகளுக்கு மத்தியிலும் பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்குவதில் ஊடகவியலாளர்கள் முதன்மையானவர்களாகச் செயற்படுகிறார்கள்.
அதேவேளை, ஊடகவியலாளர்களும் பல்வேறுபட்ட இழப்புகளை எதிர்கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த நெருக்கடியான சூழலில் நிவாரண உதவிகளுக்கு அப்பால் ஊடகவியலாளர்களது வீடுகளுக்கு நேரில் விஜயம் செய்து ஆறுதல் கூறியதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கிடையிலான சகோதரத்துவ பிணைப்பை மேலும் வலுப்படுத்த முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது”என்றார்.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால், இடர்க் காலங்களில் ஊடகவியலாளர் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் பைறூஸ் மேலும் குறிப்பிட்டார்.
No comments: