News Just In

1/20/2026 04:28:00 PM

புதிய சர்வதேச அமைப்பில் இணைய இந்தியா உட்பட 60 நாடுகளுக்கு ட்ரம் அழைப்பு


 புதிய சர்வதேச அமைப்பில் இணைய இந்தியா உட்பட 60 நாடுகளுக்கு ட்ரம் அழைப்பு



 போரால் பாதிக்கப்பட்ட பாலஸ் தீனத்தின் காசா நகரை மறுசீரமைப்பு செய்ய ”தி போர்டு ஆப் பீஸ்” என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைத்துள்ளார். இதன் தலைவராக அவரே பொறுப்பேற்றுள்ளார்.

இந்த ”தி போர்டு ஆப் பீஸ்” என்ற சர்வதேச அமைப்பில் இணைய இந்தியா, ரஷ்யா உட்பட 60 நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் மாளிகை தரப்பில் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அந்தந்த நாடுகளின் அமெரிக்க தூதர்கள், அதிபர் ட்ரம்பின் கடிதத்தை சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களிடம் அளித்துள்ளனர். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்த கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில் அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: “மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. காசா பிரச்சினைக்கு தீர்வு காண 20 அம்ச திட்டத்தை கடந்த செப்டம்பரில் வெளியிட்டேன். எனது 20 அம்ச திட்டத்தை நிறைவேற்ற ”தி போர்டு ஆப் பீஸ்” மற்றும் காசா செயல் ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த சர்வதேச அமைப்பின் கீழ், காசா செயல் ஆணையம் பிராந்திய அமைப்பாக செயல்படும். உலகில் நிலையான அமைதியை ஏற்படுத்த ”தி போர்டு ஆப் பீஸ்” அமைப்பில் இந்தியா இணைய அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார் 

ரஷ்யா, இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில், பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜோர்டான், அர்ஜென்டினா, அல்பேனியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் மாளிகை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஹங்கேரியும், வியட்நாமும் ”தி போர்டு ஆப் பீஸ்” அமைப்பில் இணைய முழு சம்மதம் தெரிவித்துள்ளன.

ஆனால் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், அதிபர் ட்ரம்பின் புதிய சர்வதேச அமைப்பில் இணைய ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா செயல் ஆணைய நியமனத்துக்கு மட்டுமே கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். ”தி போர்டு ஆப் பீஸ்” அமைப்பு குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

No comments: