“தடுப்பூசி ஏற்றும் தயக்கத்தை நீக்குதல்” : விழிப்புணர்வு கருத்தரங்கு சாய்ந்தமருதில் !
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனைக்கமைவாகவும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஏற்பாடு மற்றும் தலைமையிலும் Unicef நிறுவனத்தின் அனுசரனையுடன் “தடுப்பூசி ஏற்றும் தயக்கத்தை நீக்குதல்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (11) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று கருத்தரங்கில், கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.றிஸ்னி முத்து, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. சிவசுப்ரமணியம், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர், மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்கிச்சையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது டாக்டர் எம்.ஐ.றிஸ்னி முத்து அவர்கள் உரையாற்றுகையில், “சமீபகாலங்களில் தடுப்பூசி பற்றிய தயக்கம் எமது பிரதேசத்தில் அதிகரித்து வருவதால், தடுப்பூசி ஏற்றும் செயல்பாடுகள் குறைந்து காணப்படுகின்றன. இதனை மாற்றுவது நம் அனைவரின் கடமை. தடுப்பூசி பற்றிய பொது மக்களின் சந்தேகங்களுக்கு சரியான விளக்கங்களை வழங்கி, ஒரு தடுப்பூசி ஆயிரம் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்பதை மனதில் கொண்டு அனைவரும் தடுப்பூசிகளைப் பெறுதல் மிக அவசியம்” என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, சமயத் தலைவர் அவர்கள் உரையாற்றுகையில், “தடுப்பூசி ஏற்றுவது மதத்தின் போதனைகளுக்கு எதிரானது அல்ல, மாறாக மனித உயிர்களைப் பாதுகாக்கும் கடமையாகும். எனவே அனைவரும் தடுப்பூசிகளை உறுதியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என மதம் சார்ந்த தெளிவான கருத்துக்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. சிவசுப்ரமணியம் அவர்கள் உரையாற்றுகையில், “2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 100% தடுப்பூசி பெற்றவர்களின் விகிதம் காணப்பட்ட நிலையில், 2019க்குப் பின்னர் அது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை மீண்டும் உயர்த்துவது அனைவரின் பொறுப்பு. பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.
மேலும், தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பான குழு செயல்பாடுகளையும் நடத்தி பங்கேற்பாளர்களின் ஈடுபாட்டை அதிகரித்தார். அதனைத் தொடர்ந்து காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர் அவர்கள் உரையாற்றுகையில், “தடுப்பூசிகள் நோய்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தலைமுறையின் ஆரோக்கியத்தையும் உறுதிசெய்கின்றன. சமூகத்தில் பரவி வரும் தவறான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு சுகாதார பணியாளரும் முன்னிலையாக வேண்டும். பெற்றோர்களைச் சென்றடையும் வகையில், சுலபமான மொழியில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பரப்புவது மிகவும் அவசியம்” எனவும் வலியுறுத்தினார்.
இறுதியாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்கள் உரையாற்றுகையில், “தடுப்பூசி என்பது ஒரு குழந்தையின் எதிர்காலத்தையும் சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் ஒரு முக்கியமான கருவி. தவறான நம்பிக்கைகளை நீக்கி, உண்மையான சுகாதார அறிவை சமூகத்துக்குள் பரப்புவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்” என வலியுறுத்தியதுடன், அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் துறைகளின் வழியாக பொதுமக்களிடையே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பரப்ப உறுதியெடுத்தனர்.
No comments: