கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் மற்றும் பாடசாலை அதிபர் ஏ. ஜீ. எம். றிசாத் ஆகியோர் நாடா வெட்டி நிகழ்வை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் சித்திரப்பாட ஆசிரிய ஆலோசகர், பாடசாலை பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களின் கலைப்பணிகளை பார்வையிட்டனர்.
சித்திரப்பாட ஆசிரியர் ஏ.எஸ்.எம். நிஸ்வி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தரம் 9 மாணவர்கள் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி பல்வேறு படைப்பாற்றல்மிக்க கலைப்பணிகளை உருவாக்கினர். இக் கண்காட்சியில் ஒட்டுச் சித்திரங்கள், இரேகைச் சித்திரங்கள், அலங்காரச் சித்திரங்கள், தூரதரிசனக் காட்சிகள் போன்ற பலவகை கலைநயமிக்க படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
சிறப்பம்சமாக, மக்கா நகரில் அமைந்துள்ள கஃபாவை ஒத்த மாதிரிக் கஃபா மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் படைப்பாற்றலும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் வெளிப்படுத்திய இச் சித்திரக் கண்காட்சி, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
No comments: