காலி முகத்திடலில் இடம்பெறும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் நேற்று கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டம் 7 வது நாளாக காலி முகத்திடலில் இடம்பெற்று வருகிறது.
நேற்று இந்த போராட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கலந்து கொண்டிருந்தார். இதையடுத்து, நேற்று அவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். பொதுமக்களை ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்கள் தெரிவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் சார்பில் 12 முன்னணி சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகினர்.
அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களின் போது கைதாகுபவர்களிற்கு சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகி வரும் நிலையில், பொலிஸ் உத்தியோகத்தருக்காகவும் சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
இதன்படி கைதாக பொலிஸ் உத்தியோகத்தரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
No comments: