News Just In

4/27/2022 06:38:00 AM

அரசுக்கு ஆதரவளிக்க பல கோடிகளை முஷாரப் பெற்றுக் கொண்டார் : அரசியலில் அவரை " ஐஸ் கிரீம் பேபி" யாகவே பார்க்கிறோம் - அ.இ.ம.கா. மாநகர சபை உறுப்பினர்கள்

20ம் திருத்த வாக்கெடுப்பு இடம்பெற சில தினங்களுக்கு முன்னரே அந்த சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஆயத்தங்களை இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம். முஷாரப் தனக்கு சாதகமான பிரதேச ஆதரவாளர்களை கொண்டு செய்ததை இன்றும் சமூக வலைத்தளங்களில் காணலாம். இப்போது பொய்யான கதைகளை கூறி தன்னை நல்லவராக அடையாளப்படுத்த முனைகிறார். சட்டமூலங்களை ஆதரிக்க 02 கோடி வாங்கியதும், துறைமுக சட்டமூலத்தை ஆதரிக்க 06 கோடி வாங்கியதும் எங்களுக்கு தெரியாமல் இல்லை. 20 க்கு ஆதரவளித்தவர்களில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை தவிர ஏனைய எல்லோரும் சலுகைகளை பெற்றுள்ளனர் என்று திடமாக கூறுகிறேன். தேவையேற்படின் ஆதாரங்களையும் முன் வைப்பேன். நாங்கள் சலுகைகளை வாங்கவில்லை என்று இவர்கள் சாத்தியமிட தயாரா என கல்முனை மாநகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான உறுப்பினர்களினால் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான உறுப்பினர்களான சீ.எம். முபீத், எம்.ஐ.எம். அப்துல் மனாப், பஷீரா றியாஸ் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு சவால் விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், சத்தியம் செய்வதென்பது இராஜாங்க அமைச்சர் முஷாரபிற்கு சாதாரண விடயம். எம்.பியானதன் பின்னர் தனது கொடுப்பனவுகளில் ஒரு சதத்தையும் எடுக்கமாட்டேன். நீதிமன்றம் சென்று உழைத்து குடும்பம் நடத்துவேன் என்று பள்ளிவாசல் மிம்பரின் முன்னிலையில் வைத்து சத்தியம் செய்தவர் தான் அவர். இந்த இரண்டு வருடங்களில் எத்தனை தடவை நீதிமன்றம் சென்றுள்ளார். அவர் ஐஸ் கிரீம் பேபி போல அரசியல் செய்கிறார். கடந்த 18 வருடமாக அரசியலில் இருக்கும் நாங்கள் அரசியலை நன்றாக அறிந்துவைத்துள்ளோம். கட்சியில் சிரேஷ்ட அங்கத்தவர்களாக இருந்தும் எங்களுக்கான வாய்ப்புக்களை இழந்து அவரை கௌரவப்படுத்தும் விதமாக நாங்கள் விட்டுக்கொடுத்தோம். இன்று எவ்வித முகவரியுமற்று இருந்தவருக்கு அரசியல் முகவரி கொடுத்து மாகாண இளைஞர் அமைப்பாளர் பதவியும் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தும் வழங்கி அழகு பார்த்த கட்சிக்கு துரோகம் செய்து தலைமைக்கும் துரோகம் செய்துள்ளார்.

தலைவர் அரசியல் பழிவாங்களுக்கு உட்பட்டு சிறையில் இருந்தபோது கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டங்களின் போது அவர் நடந்துகொண்ட விதங்களை வைத்தே முஷாரப்பை நன்றாக அறிந்து கொண்டோம். அவரின் எண்ணமாக இருந்தது தலைவரை 10-15 வருடங்கள் சிறையில் இருத்திவிட்டு கட்சியை அழிப்பதே. தலைவர் சிறையில் வாடிக்கொண்டிருந்த போது மொட்டை எதிர்த்து வாக்குகளை பெற்று பின்னர் அரசுடன் கள்ள உறவை பேணி வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமால் ஹன்ஸாவினால் வழங்கப்பட்ட வாகனத்தை பாவித்துக் கொண்டு எங்களிடம் சமூக சிந்தனையாளன் போன்று நடித்துக்கொண்டிருந்தார்.

அவரை எண்ணி நாங்கள் வெட்கப்படுகிறோம். கட்சி பாரிய சவாலை எதிர்கொண்ட நேரங்களில் அரசுடன் இணைந்து செயற்பட்டார். பிரதேச சபையில் கூட உறுப்பினராக இருந்திராதவரை பொத்துவில் மண் சார்பில் பாராளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தோம். இப்போதைய அவரின் செயற்பாடுகள் பொத்துவில் மண்ணுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அவர் இணைய முன்னரே பொத்துவிலில் 10 ஆயிரம் வாக்குகளை நாங்கள் கொண்டிருந்தோம். சகல வசதிகளும் கொண்ட வீட்டுத்திட்ட நிர்மாணம் உட்பட நிறைய உதவிகளை பொத்துவிலுக்கு மக்கள் காங்கிரஸ் செய்துள்ளது. அதிலும் 12 விவசாய கிணறுகளை நிர்மாணிக்க மக்கள் காங்கிரஸ் வழங்கிய உதவியில் 09 ஐ நிர்மாணித்து விட்டு மீதி 03 கிணறுகளை கட்டாமல் பொய்யான ரசீதுகளை தயார்படுத்தி 3.85 கோடி ஊழல் செய்தவர் தான் இன்று நல்லவர் போன்று கதையளக்கிறார்.

ஒழுக்காற்று விசாரணை செய்து கட்சியிலிருந்து முஷாரப்பை நீக்கியது போன்று 43 ஆயிரம் திகாமடுல்ல மாவட்ட மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களின் வாக்குகளினால் எம்.பி ஆசனத்தை பெற்ற அவரின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இவரின் வெற்றிக்காக உண்டியல் குலுக்கி காசி சேர்த்த மக்கள் இன்று அதிருப்தியில் இருக்கிறார்கள். இவரால் இனி அரசியலில் தலைதூக்க முடியாது. அதனால் தான் வாக்களித்த மக்களையும், முகவரி தந்த கட்சியையும் மறந்து பணத்திற்கும், பதவிகளுக்கும் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார். இவரின் வாழ்வின் அடுத்த கட்டமாக ஐரோப்பிய நாட்டில் குடியேறுவதே அமையும்.

அமைச்சர் என்ற மமதையில் தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். இவர் இராஜாங்க அமைச்சராக இருக்கும் பதவி உட்பட 38 திணைக்களங்களை நிர்வாகித்த மக்கள் காங்கிரஸ் தலைவரிடம் இவரின் எந்த அஜந்தாக்களும் எடுபடாது. 2005 யில் ஆரம்பித்து 35 வருட அனுபவமிக்க முஸ்லிம் கட்சிகளுடன் போட்டியிடுவதுடன் அரசை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் மக்கள் காங்கிரஸுக்கு முஷாரப் ஒரு பொருட்டல்ல. அரசியல்வாதிகளிடம் ஊடகவியலாளராக கேள்வி கேட்க தெரிந்த முஷாரப் அரசியல் அறிவில் ஸீரோவாக உள்ளார். இன்னும் 10-15 நாட்களில் அவரின் அரசியல் எதிர்காலம் முடிந்துவிடும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கடந்த காலங்களில் சிறப்பாக நிர்வாகித்த ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் மீண்டும் கட்சியை சிறப்பாக வழிநடத்த கட்சிக்கு திரும்பவேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஊடக சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் யூ.எல். சித்தி சமீனாவும் கலந்து கொண்டிருந்தார்.

நூருல் ஹுதா உமர்

No comments: