News Just In

7/16/2021 08:44:00 PM

2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பிரதான மதகு இதுவரை திருத்தப்படாமை தொடர்பில் மக்கள் விசனம்!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிற்கும் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அறபா நகர் ஜும்ஆப் பள்ளிவாயல் வீதியில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் பிரதான மதகு இதுவரை திருத்தம் செய்யப்படாமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சுமார் கடந்த மூன்றாண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படும் இம்மதகினால் இப்பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதுடன், நோயாளிகள், வயோதிபர்களும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

அத்தோடு, இப்பிரதேசத்தின் பிரதான பாதையில் அமைந்திருப்பதன் காரணமாக இப்பாதையில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிளில் பயணிப்போரும் விபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

இது விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் பலரைத் தொடர்பு கொண்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் புறக்கணிப்புச் செய்யப்பட்டு வருகின்றமை கவலையளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச சபையில் குறித்த வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸ{ல் றஹீமைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,

அமர்வுகளின் போது கவனத்திற் கொண்டு வந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்களின் போது கோரிக்கை விடுத்தும் ஊடகங்களில் செய்தி வெளியிட்ட போதும், அதிகாரமுள்ள எந்தத் தரப்பினரும் கண்டு கொள்ளாமை கவலையளிப்பதாகவும், இப்பிரதேச மக்களின் நன்மைகருதி குறித்த மதகு உடனடியாக செப்பணிப்படல் வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ஆகவே, இப்பிரதேச மக்களின் நலன்கருதி குறித்த மதகினை செப்பணிட்டுத்தர சம்பந்தப்பட்ட தரப்பினர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுப்பதுடன், இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதேச மக்கள் சார்பில் கோரிக்கையை நிறைவேற்ற முன்வருமாறும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.










No comments: