News Just In

2/24/2020 12:23:00 PM

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!


(செங்கலடி நிருபர் சுபா)
மட்டக்களப்பு – ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியான ஆசிரியரை நியமிக்ககோரி பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (24) திங்கட்கிழமை காலை 08.00 மணியளவில் பாடசாலை வளாகத்தின் முன் பெற்றோர் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். சுமார் 03 மணி நேரம் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் வலயக் கல்விப் பணிப்பாளர் எமது ஆர்பாட்ட இடத்திற்கு வருகை தந்து எமக்கான தீர்வை கூறவேண்டும் என பெற்றோர் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஏறாவூர் நகரசபை உறுப்பினர் நடேசபதி சுதாகரன் அவர்களும் இவ் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

எங்கள் பாடசாலையை பழிவாங்காதீர்கள், வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், எமது மாணவச் செல்வங்களை பறக்கணிக்காதே!  தரம் 05 மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை. என எழுதப்பட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வருகை தந்து ஆர்பாட்டடக்ககாரர்களுடன் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினார் ஆர்பாட்டக்காரர்களினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதே வேளை வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வருகை தந்திருந்ததுடன் அதிகாரிகளுடன் ஆர்பாட்டக்காரர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் பாடசாலை அதிபர் அலுவகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் அடுத்த வாரம் இப்பாடசாலைக்கான தரம் 05 மாணவர்களுக்கான தகுதிவாய்ந்த ஆசிரியர் நியமிக்ப்படுவார் என வலயக்கல்வி அலுகலக அதிகாரிகளினால் வாக்குறுதியளித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


















No comments: