News Just In

11/25/2026 10:32:00 AM

பெண் கலெக்டருக்கு முறையற்ற குறுஞ்செய்தி..! பதவியிலிருந்து விலக TVK எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் முடிவு

பெண் கலெக்டருக்கு முறையற்ற குறுஞ்செய்தி..! பதவியிலிருந்து விலக TVK எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் முடிவு



கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பதவி விலக முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பெண் கலெக்டருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கான முழு ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றும் பெண் கலெக்டர் ஒருவர். கடந்த மே மாதம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் கலெக்டருக்கு தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் கடந்த 8-ந்தேதி முதல் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வைரலானது.

இருப்பினும் அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டருக்கு அதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்பவில்லை என தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ.வும் மறுப்பு தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டரும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்தார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஷக்னாஸ் நேரில் சென்றார். எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய அவர், மாவட்ட கலெக்டரிடமிருந்து புகாரை எழுத்துப்பூர்வமாக பெற்றார்.

பின்னர் அந்த புகாரை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்யுமாறு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஷக்னாஸ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கள்ளக் குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக காவல்துறை சூப்பிரண்டு சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி. காமினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கலெக்டருக்கு நீதி கிடைக்கும் வரை, இந்த வழக்கு தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடக்கூடாது. இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து வருகிற டிசம்பர் 22-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது பதவியை இன்று அல்லது நாளை பதவி விலகல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: