
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொகுதிகள் மற்றும் எல்லை நிர்ணயம் என்பவற்றை தீர்மானித்த பின்னர்அறிவிக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இந்த இரண்டு உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் பணிகள் இதுவரை நிறைவடையாதுள்ள தாகவும் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட வேண்டும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ், அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர், எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் இரண்டு எல்லை நிர்ணயக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் தேர்தல் வட்டாரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் வட்டாரங்களை உருவாக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னரே, கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
No comments: