காவன்திஸ்ஸ தந்தங்களைக் கொண்ட யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி உயிரிழக்கச் செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு மஹவ நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
மஹவ நீதவான் அனுருத்திகா செனவிரத்ன இந்த உத்தரவை கல்கமுவ வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு பிறப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யானையின் உடற்கூற்றுப் பரிசோதனையின்போது மூன்று துப்பாக்கிச் சன்னங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒப்பிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதவான், சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

No comments: