News Just In

11/12/2026 07:02:00 AM

சவூதியில் முடிவுக்கு வந்த அனோஜன் வழக்கு! நாடு திரும்பும் நாள் எப்போது?

சவூதியில் முடிவுக்கு வந்த அனோஜன் வழக்கு! நாடு திரும்பும் நாள் எப்போது?


பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவொன்றை அடிப்படையாகக் கொண்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


சவூதி அரேபியாவின் அரச சட்டத்தரணிகள் திணைக்களம் கடந்த நவம்பர் 9ஆம் திகதி (2026) அனோஜனுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவருக்கு எதிராக எஞ்சியிருந்த சட்ட நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பேஸ்புக் பதிவொன்று தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாண மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர மற்றும் ஏனைய தலையீடுகளைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி சவூதி நீதிமன்றம் குறித்த மரண தண்டனையை இரத்துச் செய்திருந்தது.

ஆனால், அவருக்கு எதிராக ஏனைய தண்டனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எஞ்சியிருந்ததால், அவரை முழுமையாக விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வந்தது.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் தற்போதைய தீர்மானத்தின் மூலம் எஞ்சியிருந்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனோஜன் இலங்கைக்குத் திரும்புவதற்கான வழியும் ஏற்பட்டுள்ளது.

அவர் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் இலங்கைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அனோஜனின் குடும்ப உறுப்பினர்கள் இன்று (11) வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று, அவரது விடுதலைக்காகப் பங்களித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சு, அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதல், வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திரத் தலையீடுகள் மற்றும் ஏனைய அதிகாரிகளின் முயற்சிகளே இந்த முடிவுக்குக் காரணம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கம், அந்நாட்டு நீதித்துறை, இரு நாடுகளினதும் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் வழக்கில் உதவுவதற்காக சவூதி அரேபியா சென்ற சட்டத்தரணிகள் குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்

No comments: