News Just In

11/22/2026 07:13:00 PM

தமிழ் – முஸ்லிம் அரசியலில் இளைஞர்கள் ஓரங்கட்டப்பட்டதால் இலட்சிய அரசியல் பலவீனமடைந்துள்ளது – எச்.எம்.எம். ஹரீஸ்

தமிழ் – முஸ்லிம் அரசியலில் இளைஞர்கள் ஓரங்கட்டப்பட்டதால் இலட்சிய அரசியல் பலவீனமடைந்துள்ளது – எச்.எம்.எம். ஹரீஸ்




நூருல் ஹுதா உமர்

தற்போதைய தமிழ், முஸ்லிம் அரசியல் பரப்பில் இளைஞர் தலைமுறையினர் திட்டமிட்டோ அல்லது தாமாகவோ ஓரங்கட்டப்பட்டிருப்பதே இலட்சிய அரசியல் பலவீனமடைந்துள்ளமைக்கான முக்கிய காரணமாகும். இதனால் தமிழ்- முஸ்லிம் இரு சமூகங்களினதும் அரசியல் கட்சிகள் தாம் உருவாக்கப்பட்ட அடிப்படை நோக்கங்களையும் இலட்சியங்களையும் மறந்து, தேர்தல் வெற்றிகளையும் அன்றாட அரசியல் நடவடிக்கைகளையும் மட்டுமே முன்னிலைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

சனிக்கிழமை மாளிகைக்காட்டில் நடைபெற்ற தினச்சுடர் விருது விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இன்று எமது அரசியல் இலக்குகளும், இலட்சியங்களும் இல்லாதவையாக ஓரங்கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திலும் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திலும் இளைஞர்கள் மிக முக்கியமான பங்காற்றினர்.

1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்டபோது, ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு இந்திய அரசு அழுத்தம் கொடுத்த நிலையிலும், அப்போதைய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது போராட்ட இலட்சியத்தில் உறுதியாக இருந்தார். போராட்ட வடிவங்கள் மாறலாம்; ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது என்ற அவரது நிலைப்பாடு இங்கு கவனிக்கத்தக்கது.

ஆனால், இன்று தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் மத்தியில் பெரும் அரசியல் வெற்றிடம் காணப்படுகின்றது. தமது இயக்கங்களும் கட்சிகளும் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டன, எத்தகைய இலட்சியங்களை முன்னிறுத்தின என்பதையே பலர் மறந்துவிட்டனர். தேர்தல் காலங்களில் கட்சியின் வெற்றியைப் பெற்றுக்கொள்வதும், அதன் பின்னர் வழமையான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுமே அரசியல் இலட்சியமாக மாறியுள்ளது.

இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இளைஞர் தலைமுறையினர் அரசியல் முடிவெடுக்கும் கட்டமைப்புகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டமையாகும். அவர்கள் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டார்களா அல்லது தாமாகவே அரசியலில் இருந்து விலகினார்களா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், 1980களின் ஆரம்பத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபை போன்ற வரையறுக்கப்பட்ட அரசியல் ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டபோது, அன்றைய முதிர்ந்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் இளம் போராட்டத் தலைமுறையினருக்கும் இடையில் அரசியல் அணுகுமுறையில் வேறுபாடுகள் காணப்பட்டன. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் அரசியல் வழிமுறைகளை முன்னெடுத்தபோது, இளைஞர் அமைப்புகள் அதனைத் தாண்டிய அரசியல் உரிமைகளையும் மாற்றங்களையும் கோரின.

அந்த இளைஞர் தலைமுறையினரின் அரசியல் அழுத்தங்களும் போராட்டங்களும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான விவாதங்களைத் தீவிரப்படுத்தின. அதன் தொடர்ச்சியாக 1987ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.

அந்தக் காலப்பகுதியில் பிரபாகரன், பத்மநாபா உள்ளிட்ட பல்வேறு இளம் அரசியல் மற்றும் இயக்கத் தலைவர்கள் தங்களது இளமைப் பருவத்திலேயே அரசியல் இலட்சியங்களுடன் செயற்பட்டனர். இளைஞர்களின் வேட்கையும் உறுதியும் அரசியல் மாற்றங்களுக்கான முக்கிய உந்துசக்தியாக அமைந்தன.

இதேபோன்று முஸ்லிம் அரசியல் வரலாற்றிலும் இளைஞர் தலைமையின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனது பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் 1980களின் இறுதியில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அரசியல் அடையாளத்தையும் உரிமைகளையும் முன்னிறுத்தியபோது, அவரும் இளம் அரசியல் தலைவராகவே இருந்தார்.

அந்தக் காலப்பகுதியில் முஸ்லிம் அரசியல் பொறுப்புகளில் இருந்த பலர் 50, 60 வயதுகளைக் கடந்தவர்களாக இருந்தனர். ஆனால் இளம் தலைமுறையினரின் சமூக உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்ட அஷ்ரப் அவர்கள், முஸ்லிம் சமூகத்திற்கென தனித்துவமான அரசியல் குரல் அவசியம் என்பதை உணர்ந்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட சூழலில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அரசியல் அபிலாஷைகளும் அதிகாரப் பங்கீடு தொடர்பான எதிர்பார்ப்புகளும் போதியளவில் பிரதிபலிக்கப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அரசியல் அடையாளத்தையும் உரிமைகளையும் வலியுறுத்தும் அரசியல் இயக்கத்தின் தேவை வலுப்பெற்றது.

அந்தப் பயணத்தில் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினராக இருந்தனர். அந்த இளம் தலைமுறையினரின் பங்களிப்பே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உணர்வையும் தனித்துவமான அடையாளத்தையும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. அன்று தமிழ், முஸ்லிம் சமூகங்களில் இளைஞர்கள் அரசியல் தலைமையின் முக்கிய பொறுப்புகளில் இருந்ததால், சமூக உரிமைகள், அரசியல் அதிகாரம், தனித்துவமான அடையாளம் ஆகியவற்றை நோக்கிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மக்களிடம் காணப்பட்டன.

ஆனால் இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. தமிழ், முஸ்லிம் அரசியல் பரப்புகளில் இளைஞர் தலைமுறை ஓரங்கட்டப்பட்டுள்ளதால், அரசியல் இலட்சியங்களும் சமூக உரிமைகள் தொடர்பான நீண்டகால நோக்கங்களும் மங்கிப்போயுள்ளன.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் பாரம்பரியக் கொள்கை அரசியல் கட்சிகள் எதிர்கொண்ட பின்னடைவுகளும், தெற்கின் மாற்று அரசியல் சக்திகள் பெற்ற வெற்றிகளும் இந்த மாற்றத்தின் ஒரு வெளிப்பாடாகும். முஸ்லிம் அரசியல் பரப்பிலும் இதேபோன்ற மாற்றங்களும் சவால்களும் காணப்படுகின்றன.

எனவே, இந்த நிலைமைக்கான காரணங்களை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஆழமாக ஆராய்ந்து அடையாளம் காண வேண்டும். சமூகத்தின் உண்மையான குரல்கள் அரசியல் அரங்கில் பலவீனப்படுத்தப்படும்போது, அந்தச் சமூகங்களின் உரிமைகளும் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளும் பின்தள்ளப்படும் அபாயம் உள்ளது. தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி அனைத்து இனங்களையும் சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் முற்போக்கான அணுகுமுறையைக் கொண்டவர் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இருப்பினும், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அபிவிருத்தி எதிர்பார்ப்புகள் உரிய முறையில் முன்வைக்கப்படுவதற்கு வலுவான சமூக அரசியல் குரல்கள் அவசியமாகும் என்றார்.

No comments: