News Just In

11/25/2026 02:57:00 PM

சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்!

சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு வலையமைப்பை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் பழைய மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள், சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், சிறுவர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்தில் செயற்படும் நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்புகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

மேலும், சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எவ்வாறு பதிலளிப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சிறுவர்களைப் பாதுகாத்தல், சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், வன்முறைகளைத் தடுத்தல், சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து வலையமைப்பின் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக சட்ட வைத்திய அதிகாரி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிஷா றியாஸ், மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் சு. பிரபாகர் ஆகியோர் செயற்பட்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட துறைசார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

No comments: