இன்றைய வானிலை
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கமானது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் தென் மேற்குப் பகுதியுடன் இணைந்ததாக ஆழ்ந்த தாழ் அமுக்கமாக வலுவடைந்து தொடர்ந்து மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும். இது மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியுடனும் தென்மேற்குப் பகுதியுடனும் இணைந்ததாக இன்று இரவு 11.30 மணியளவில் சூறாவளியாக வலுவடையக்கூடும். இது மேலும் தீவிரமடைந்து நாளையளவில் பலமிக்க சூறாவளியாக வங்காள விரிகுடாவின் மத்தியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்த பலமிக்க சூறாவளி நாளை மறுதினமளவில் சுமார் 120 கிலோமீற்றர் வேகத்தில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளிக்கு இந்தியாவில் முன்மொழியப்பட்ட "முரசு" எனும் பெயர் சூட்டப்படும் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வங்காள விரிகுடாவின் ஆழ் கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 70 - 80 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் , இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.
இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகையினால் மறு அறிவித்தல் வரையில் மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் வங்காள விரிகுடாவின் ஆழ் கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மத்திய, சப்ரகமுவ , மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
இதேவேளை, நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் வடகிழக்குத் திசையில் இருந்தும் நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
11/01/2026 09:08:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

No comments: