அடுத்த நிதியாண்டுக்கான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பாதீட்டு உரை நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக இடம் பெற்றிருக்கிறது.
இலங்கை பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக மீட்க முடியாமல் இருப்பதற்கான காரண- காரியங்களை ஜனாதிபதி ஆதாரங்களுடன் விவரித்த முறைமையை எதிர்க் கட்சி உறுப்பினர்களின் மனசாட்சியும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தி உணர்த்தப்பட்டிருக்கிறது.
ஆனாலும் ஜனாதிபதியின் விரிவான அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய விதப்புரைகள் பற்றிய பொறிமுறைகள் மற்றும் அதற்கான நிதிகளை பெறும் வழிகள் எவ்வாறு சாத்தியமடையும் என்ற கேள்விகள் எழுகின்றன.
அடுத்த நிதியாண்டுக்கான பாதீடு மக்களுக்கான நிவாரணங்கள் சலுகைகள் என்பதை விட விதப்புரைகளும், உறுதி மொழிகளுமே விஞ்சிக்கிடப்பதாக பொருளியல் நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொருளாதார வேலைத் திட்டங்கள் அதன் பற்றாக்குறைகள் மற்றும் மேலதிகமாக செய்ய வேண்டிய பணிகள் பற்றிய சமநிலைப்படுத்தல்களும் அதிகமாக காணப்பட்டன.
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த பாதீட்டு திட்டத்தில் அடுத்த ஆண்டு கடன்கள் குறையும் என்ற தகவல்கள் மாத்திரமே கொஞ்சம் மூச்சுவிடக்கூடியதாக இருக்கின்றது.
சர்வதேச நாடுகள் மற்றும் நிதி வழங்கும் உலக நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து பெற்ற கடன்களையும் அதற்கான வட்டிகளையும் குறைப்பதற்கான திட்டங்கள் கடந்த 2024 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை மத்திய வங்கி உயர் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நிதிகளை கையாளும் விடயங்களில் நிதி சார்ந்த மூத்த அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்புகள் பரிந்துரைகள் அடுத்த 2027 நிதியாண்டில் கடன்கள் குறையக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கியிருக்கின்றன.
ஆனாலும், அமெரிக்க சீனா இந்தியா போன்ற வல்லரசு நாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை மீள செலுத்துவதற்காக பொருத்தமான பொறிமுறைகள் இன்னும் உரிய முறையில் அமையவில்லை என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் எவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப நிதிகளை வழங்கினாலும் நிபந்தனைகள் கடுமையாக இருக்கின்றன.
இது தேசிய மக்கள் சக்தி எதிர்க் கட்சியில் இருந்த போது விளக்கமாக சுட்டிக்காட்டப்பட்ட ஒரு விடயம் ஆனாலும் தற்போது அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனை ஆளும் கட்சியாக இருந்து தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் மகிந்த ராஜபக்ச தரப்பு மிக தீவிரமாக சுட்டிக்காட்டுகிறது.
இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் சிலவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றியமைக்கின்றது.
ஜனாதிபதியின் இந்த பாதீட்டு உரையில் விவரிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் செயற்படுத்த வேண்டுமானால் இலங்கை தீவின் உள்ளூர் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்
இறக்குமதி குறைவடைந்து உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்
அதேநேரம் தற்போதைய புவிசார் அரசியல் நெருக்கடிகள் குறைவடைய வேண்டும் . குறிப்பாக அமெரிக்க - ஈரான் யுத்தம் முடிவுக்கு வரவேண்டும்.
அப்போது தான் உலக பொருளாதாரம் உயர்வடையும் அவ்வாறு உயர்வடைந்தால் இலங்கை போன்ற வளரும் நாடுகளுக்கு அது சாதகமாக அமையும்.
ஆனால் அது பற்றி விபரிக்கப்படவில்லை. சர்வதேச எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்ட நிலமைக்கு நிவாரணங்கள் வழங்குவது பற்றியே பேசினார்.
உலக அரசியல், பொருளாதார குழப்பங்கள் பற்றியும் அதனால் எதிர் நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் பாதீட்டு உரையில் ஜனாதிபதி எதையும் குறிப்பிடவில்லை.

No comments: