தனிநபர் வருமான வரி விலக்கு எல்லையை மாதாந்தம் 1,62,500 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, மாதாந்தம் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக 1,62,500 ரூபா அல்லது அதற்குக் குறைவான தொகையைப் பெறுபவர்கள் தமது சம்பளத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
6 சதவீத வரி வீதம் நடைமுறைப்படுத்தப்படும் வருமான வரி அடுக்கு மாதாந்தம் 70,833 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, தற்போதுள்ள 41,667 ரூபா மாதாந்த வருமான வரி அடுக்குகள் 50,000 ரூபாவாக விரிவுபடுத்தப்படவுள்ளன.
மேலும், வரி வீதங்கள் 6, 12, 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களாக நிர்ணயிக்கப்படவுள்ளன. இதன்படி, 6 சதவீத வரி வீதத்தைத் தொடர்ந்து 18 சதவீதத்திற்குப் பதிலாக 12 சதவீத வரி வீதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திருத்தங்களின் மூலம் அதிகபட்ச தனிநபர் வருமான வரி வீதம் பொருந்தும் மாதாந்த வருமான எல்லை 358,000 ரூபாவிலிருந்து 433,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
இதன் விளைவாக, ஒவ்வொரு தனிநபர் வரி செலுத்துநருக்கும் மாதாந்தம் குறைந்தபட்சம் 750 ரூபா முதல் அதிகபட்சம் 15,750 ரூபா வரையான மேலதிக வரிச் சலுகை கிடைக்கும்.
No comments: