News Just In

11/06/2026 04:21:00 PM

எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு மேய்ச்சல் தரை தொடர்பாக வாய் திறக்கவில்லை - அரியநேத்திரன்


எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு மேய்ச்சல் தரை தொடர்பாக வாய் திறக்கவில்லை - அரியநேத்திரன்



மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு, மாதவனை அத்துமீறல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது அவருடைய உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெள்ளிக்கிழமை (6) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது….

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய வாக்குகளை அவர் பெற்றவர். மட்டக்களப்பில் ஒரு அநியாயம் நடக்கும்போது பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச இதுவரை அதைப் பற்றி அலட்டாமல் இருப்பது அவருக்கு வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட மக்களை அவமதித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் ஏன் கூறவில்லை. இந்த விடயம் தொடர்பாக ஏன் வாய் திறக்கவில்லை?

கடந்த 2024 ஜூலை 24இல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்தால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கென ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்து, மயிலத்தமடு - மாதவனை பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதாக பகிரங்கமாக உறுதியளித்திருந்தார்.

தற்போது ஆட்சியில் இல்லை என்றாலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சிறப்புரிமையை பாவித்து நாடாளுமன்றத்தில் மேய்ச்சல் தரை தொடர்பாக விவாதிக்க முடியும். அதற்கு சிரமமாக இருந்தால் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக உரையாற்றியிருக்கலாம். இரண்டு வருடங்களாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்து விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் பற்றி உரையாற்றும் இவர் மேய்ச்சல் தரை விடயத்தை கணக்கெடுக்காமல் இருப்பது அவருடைய இனவாதம் வெளிப்படுகிறது என்பதே உண்மை.

கடந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய 139,110 வாக்குகளை பெற்றார்.
அரசுச் செய்திகள்

இரவு பகலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஒரு அணியினர் விசுவாசமாகவும். அர்ப்பணிப்பாகவும் சுவரொட்டிகளை ஒட்டியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் மேடை போட்டும் பிரசாரம் செய்தனர். அவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் 139,110 மொத்த வாக்கு சஜித் ஜனாதிபதி தேர்தலில் பெற்றார். அதில் மட்டக்களப்பு தொகுதியில் 64,068 வாக்குகளும் கல்குடா தொகுதியில் 45,325 வாக்குகளும் பட்டிருப்பு தொகுதியில் 26512 வாக்குகளும் தபால் மூலமாக 3205 வாக்குகளும் அவருக்கு கிடைத்தன.
அரசுச் செய்திகள்

தற்போது ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து சஜித் எதிர்க்கட்சியாக தெரிவாகி இரண்டு வருடங்கள் கடக்கிறது. ஆனால் இதுவரை மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பண்ணையாளர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் பண்ணையாளர்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

இரண்டு வருடங்களாக தொடர் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், பசு மாடுகள் வெட்டி கொலை, பண்ணையாளர்கள் கடத்தல் என தினமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இது பற்றி அவரும் அவருடைய கட்சி உறுப்பினர்களும் மௌனம் காப்பது தென்னிலங்கை பிரதான அரசியல் தலைவர்கள் எவரும் கணக்கெடுக்காமல் இருப்பதும் அவர்களுடைய இனவாத முகங்கள் மீண்டும் நிருபணமாகியுள்ளது. பண்ணையாளர்களின் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்தும் மேய்ச்சல் தரை தொடர்பாகவும் தேர்தல் காலத்தில் மட்டக்களப்புக்கு சென்று வாக்குறுதிகளை வழங்கும் இவர்கள் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்தால் மாற்றான்தாய் மனப்பாங்குடன் இருப்பது ஏன் என்பதை தமிழினம் புரிந்துகொள்ள வேண்டும்

2026 நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஒரு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத் ஆகியோர் அங்கு நடக்கும் அத்துமீறல் தொடர்பாகவும், அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கு தொடர்பாகவும் தற்போதைய அநுர அரசின் ஏமாற்றம் தொடர்பாகவும் விளக்கமாக உரையாற்றினர்.

உண்மையில் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயம் தொடர்பாக தமது கருத்தை கூறவில்லை. அதனை விட்டு விலகி வேறு விடயங்களை மட்டுமே அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

ஆனால் ஒவ்வொரு மாதமும் தமிழ் பேசும் கட்சிகளை தமது அலுவலகத்தில் அழைத்து கூட்டம் நடத்துகிறார். மேய்ச்சல் தரை தொடர்பாக அவர் அந்த கலந்துரையாடல்களில் பேசினாரா, பேசவில்லையா என்பதை கூட அவருடைய ஊடகக் குழு வெளியிடவில்லை. வட கிழக்கு மக்களால் தெரிவான தமிழ் தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அவருடன் உரையாடுகிறார்கள். படங்கள் காட்டப்படுகின்றன.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பாக இதுவரை ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இதை பற்றி ஏன் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பேசவில்லை என கேட்காமல் தலையாட்டி வருகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அக்கறை காட்டவில்லையெனில், ஏன் ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேரத்தை வீணடிக்கவேண்டும் என அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: