News Just In

10/27/2026 06:51:00 PM

நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியில் அதிபருடன் கால்பந்துக் கழகங்கள் சந்திப்பு; ஒற்றுமையை வலுப்படுத்த புதிய திட்டம்!

நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியில் அதிபருடன் கால்பந்துக் கழகங்கள் சந்திப்பு; ஒற்றுமையை வலுப்படுத்த புதிய திட்டம்!





நூருல் ஹுதா உமர்

நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதுடன், இளைஞர்களிடையே ஒழுக்கத்தையும் நல்லொழுக்கப் பண்புகளையும் வளர்க்கும் நோக்கில், பாடசாலை நிர்வாகத்துக்கும் பிரதேச கால்பந்துக் கழகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபலமான ரெட் றோஸ் மற்றும் வெஸ்டர்ன் கால்பந்துக் கழகங்களின் பிரதிநிதிகள், கல்லூரி அதிபரின் விசேட அழைப்பின் பேரில், நேற்று (26) இரவு 8.30 மணியளவில் கல்லூரி அதிபர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் கல்லூரி அதிபருடன், பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, பாடசாலை மாணவர்களின் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துதல், அவர்களுக்குத் தரமான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் விளையாட்டின் ஊடாக ஒழுக்கம், கட்டுப்பாடு, தலைமைத்துவம், குழு உணர்வு ஆகிய பண்புகளை வளர்த்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், இன்றைய இளைஞர்களைத் திசைதிருப்பக்கூடிய போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட தீய பழக்கவழக்கங்களிலிருந்து பாதுகாத்து, அவர்களை விளையாட்டு மற்றும் ஆக்கபூர்வமான சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பாடசாலைச் சமூகத்திற்கும் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கும் இடையில் நெருக்கமான உறவையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளின் வளர்ச்சிக்காக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக, எதிர்காலத்தில் குறித்த கால்பந்துக் கழகங்களின் வழிகாட்டல் மற்றும் ஒத்துழைப்புடன் பாடசாலை மட்டத்திலான கால்பந்துப் போட்டிகளை நடத்துவது தொடர்பாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதற்கும், இளைஞர்களிடையே நல்லொழுக்கத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்ப்பதற்கும் இத்தகைய கூட்டுமுயற்சிகள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலையின் முன்னேற்றத்திற்காகவும் மாணவர்களின் எதிர்கால நலனுக்காகவும் கல்விச் சமூகமும் விளையாட்டுக் கழகங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முன்னெடுப்பாக இச்சந்திப்பு அமைந்துள்ளது.

No comments: