
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(27.10.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையான பிள்ளையான உட்பட மூவருக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திறந்த நீதிமன்றில் விசாரணை
2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ஏப்ரலில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்துள்ளனர்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்புபட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜூன் 17ஆம் திகதி சிஜடியினர் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று(27) திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை முன்னிலைப்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு, லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸ் இற்கு தொடர்ந்து பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
No comments: