News Just In

10/29/2026 11:38:00 AM

இஸ்ரேலின் தீர்க்கமான தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை இல்லை ஆட்சி அமைப்பதில் இழுபறி; அரபு கட்சிகள் செல்வாக்கு

இஸ்ரேலின் தீர்க்கமான தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை இல்லை
ஆட்சி அமைப்பதில் இழுபறி; அரபு கட்சிகள் செல்வாக்கு





இஸ்ரேலின் தீர்க்கமான பொதுத் தேர்தலில் எவரும் பெரும்பான்மை வாக்குகளை வெல்லாத நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரதான போட்டியாளரான முன்னாள் இராணுவத் தளபதி காடி எய்சன்கொட் ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். நெதன்யாகு, வலதுசாரி அரசொன்றை அமைப்பது குறித்து கூறி இருக்கும் அதேநேரம், வாக்காளர்கள் நெதன்யாகு அரசை நிராகரித்திருப்பதாக எய்சன்கொட் அறிவித்துள்ளார.

எனினும் தேர்தல் முடிவுகளின்படி எந்தத் தரப்பும் அறுதிப் பெரும்பான்மையை பெறாத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் ஆரம்பக் கட்ட முடிவுகளின்படி, எய்சன்கொட்டின் யஷார் கட்சி மற்றும் அவரது ‘மாற்றத்திற்கான கூட்டணியில்’ இடம்பெற்றிருக்கும் யூத எதிர்க்கட்சிகள் 120 ஆசணங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 47 ஆசனங்களை வென்றுள்ளது.

எனினும் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் அதன் தீவிர வலதுசாரி மற்றும் அதிதீவிர மரபுவழி யூதக் கூட்டணி ஏழு ஆசனங்களால் முன்னிலை பெற்றிருப்பதாக ஆரம்பக் கட்ட தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.

இந்நிலையில் இரு அரபுக் கட்சிகளும் தீர்க்கமான ஆசனங்களை வென்றுள்ளன. இந்த இரு கட்சிகளும் மொத்தமான 18 அல்லது 19 ஆசனங்களை வென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்தக் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதில்லை என இரு பிரதான கூட்டணிகளும் தெரிவித்துள்ளன.

கடந்த 2023 ஒக்டோபரில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல், அதனைத் தொடர்ந்து காசாவில் இஸ்ரேலின் போர், மற்றும் லெபனானிலும் இஸ்ரேல் போர் தொடுத்ததோடு இறுதியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது பிராந்திய போர் ஒன்றை தூண்டி இருக்கும் சூழலிலேயே இஸ்ரேலில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.

இதில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவு அதிக வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. இதன்படி பதிவாகி இக்கும் 77.7 வீத வாக்குப் பதிவானது 1999 இற்கு பின்னர் அதிக எண்ணிக்கை என்று மத்திய தேர்தல் குழு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் நேற்று இரவு தொடக்கம் வெளியிடப்பட்டபோதும் பெரும்பாலும் இராணுவப் பணியாளர்களால் அளிக்கப்பட்ட சுமார் 600,000 தபால் மூல வாக்குகள், அதாவது மொத்த வாக்கு எண்ணிக்கையில் சுமார் 10 வீதம் இன்று (29) வியாழக்கிழமை வரை முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை.

இறுதித் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டதும், அனைத்து அரசியல் அணிகளுடனும் கலந்தாலோசித்த பின்னர், ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தாம் கருதும் கட்சித் தலைவரை ஆட்சி அமைக்குமாறு இஸ்ரேல் ஜனாதிபதி அழைப்பார். இந்தச் செயல்முறைக்கு பல வாரங்கள் ஆகலாம்.

அவர்கள் அதில் தோல்வியடைந்தால், இறுதியில் மீண்டும் ஒரு தேர்தலை நடத்த வேண்டியிருக்கும்.

‘வலுவான, வலதுசாரி தேசிய அரசாங்கம்’ ஒன்றை அமைக்க வேண்டும் என நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். என்றாலும், நெதன்யாகு தொடர்ந்து பிரதமராக இருப்பதற்கு எதிராகவே பொதுமக்கள் வாக்களித்துள்ளதாகக் கூறிய எய்சன்கொட்;, அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவர்கள் இருவரும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதாகக் கூறவில்லை.

இந்த சூழலில் அரசியல் முட்டுக்கட்டை நெதன்யாகுவுக்குச் சாதகமாக அமையக்கூடும். இதனால், நீண்டகாலம் நீடிக்கக்கூடிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலப்பகுதியிலும், அல்லது மற்றொரு தேர்தலை நடத்தும் வரை கூட, அவர் காபந்து பிரதமராகப் பதவியில் தொடர்ந்து இருக்கக்கூடும்.

ஜெரூசலத்தில் உள்ள லிகுட் கட்சியின் தேர்தல் தலைமையகத்தில், கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய நெதன்யாகு, இஸ்ரேலின் இராணுவ வெற்றிகளைச் சுட்டிக்காட்டியதுடன், ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்புடன் இணைந்து மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் குறிப்பிட்டார்.

‘ஈரானிடமிருந்து நிலவுகின்ற இருத்தலுக்கே அச்சுறுத்தலான ஆபத்தை ஒருமுறை நிரந்தரமாக அகற்றுவதற்கு, எமது கூட்டாளியான ஜனாதிபதி டிரம்புடன் இணைந்து செயற்பட இஸ்ரேலுக்கு ஒரு தனித்துவமான வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், வேறு உள்நோக்கங்கள் இந்தப் புனிதப் பணியிலிருந்து எம்மைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது’ என்று அவர் கூறினார்.

மறுபுறம், இஸ்ரேலின் பாதுகாப்பை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று எய்சன்கொட் இதற்கு முன்னர் நெதன்யாகுவை எச்சரித்திருந்தார்.

‘நெதன்யாகு, மக்களின் ஆணையோ நம்பிக்கையோ இல்லாத காபந்து பிரதமராகவே உள்ளார்’ என்று கூறிய எய்சன்கொட், இஸ்ரேலின் பாதுகாப்பை விட அரசியல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக உறுதியாகச் செயற்படுமாறு பாதுகாப்புத் துறையினருக்கு அழைப்பு விடுத்தார். அரபு இஸ்ரேலியர்களிடையே வாக்களிப்பு வீதம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அரபு கட்சிகளான ஐக்கிய அரபு அணி மற்றும் கூட்டு அணி ஆகிய இரண்டும் பாராளுமன்றத்தில் மேலதிக ஆசனங்கள் பலவற்றைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அரபு இஸ்ரேலியர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர். இவர்களில் பலர் தங்களை இஸ்ரேலின் பலஸ்தீனியக் குடிமக்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியமைக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக இவ்விரு கட்சிகளும் உருவெடுத்துள்ளன. எனினும், அவர்களுடன் இணைந்து அரசாங்கத்தில் செயற்படுவதற்கு ஒரேயொரு கட்சி மட்டுமே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது.

2021 தேர்தலுக்குப் பின்னர், நஃப்தாலி பென்னட் மற்றும் யாயிர் லாப்பிட் ஆகியோர் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அரபு கட்சியும் அங்கம் வகித்தது. அந்தக் கூட்டணி ஓராண்டு காலம் நீடித்த பின்னர் கவிழ்ந்தது

No comments: