News Just In

9/05/2026 06:39:00 PM

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் வெப்பம், வறட்சி – குடிநீர் பிரச்சினைக்கு அவசர நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் வெப்பம், வறட்சி – குடிநீர் பிரச்சினைக்கு அவசர நடவடிக்கை!




உலகளாவிய எல் நினோ தாக்கத்தால் கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், நேற்று முன்தினம் (03) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மாகாணத்தின் பல பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன், அதிகரித்துள்ள வெப்பநிலையும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும், வீடுகளில் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் குழாய் நீரை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து, நிலைமையை சமாளிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், விவசாயம் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை முறையாக முகாமைத்துவம் செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நீர் பற்றாக்குறையால் விவசாய மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும், அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் வறட்சியான காலநிலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, குறிப்பாக குடிநீர் விநியோகத்தை தடையின்றி உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

இந்த விசேட கலந்துரையாடலில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே. குணநாதன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

No comments: