News Just In

9/24/2026 09:28:00 AM

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம் : இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம் : இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!



நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதிகளில் உருவாகியுள்ள ஆழமான தாழமுக்கமே இதற்குக் காரணம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தாழமுக்கம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த வானிலை அமைப்பு இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அதன் தாக்கம் காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை தொடரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் மற்றும் திடீர் பலத்த காற்று தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

No comments: