
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்.11-ம் தேதி, அல்காய்தா தீவிரவாதிகள் 2 பயணிகள் விமானத்தை கடத்திச் சென்று அங்கிருந்த இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது மோதினர். இதில் அந்தக் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து இடிந்து தரைமட்டமானது.
இந்த சம்பவத்தில், அந்தக் கட்டிடத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாது, 19 தீவிரவாதிகள், 300 தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 2,996 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு,
ஒசாமா பின் லேடனின் அல் காய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின் லேடன், அமெரிக்க ராணுவத்தால் 2011 மே 2-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் குறித்து, ஒரு வாரத்துக்கு முன்பே வெள்ளை மாளிகைக்கு எச்சரிக்கை தகவல் வந்ததாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, இச்சம்பவத்துக்கு ஒரு வாரம் முன்பு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகளுடன் அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளை மாளிகை அதிகாரி ரிச்சர்ட் ஏ. கிளார்க், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீசா ரைஸுக்கு தனிப்பட்ட குறிப்பு ஒன்றை அனுப்பினார். அதில், அமெரிக்கர்களைக் கொல்ல அல்-காய்தா ஒருபோதும் தயங்காது என்று எச்சரித்திருந்தார்.
மேலும், இத்தாக்குதலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, அல்-காய்தாவை எதிர்கொள்வதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறதா என்று கிளார்க், ரைஸிடம் கேள்வி எழுப்பியிருந்தார். முந்தைய ஆண்டில் ஏமனில் யுஎஸ்எஸ் கோல் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் அல்-காய்தாவுக்கும், தலிபான்களுக்கும் மேலும் துணிச்சல் ஏற்படலாம் என்றும், அமெரிக்கர்களைக் கொன்றாலும் அதற்காக எந்த விலையும் கொடுக்க வேண்டியிருக்காது என்று அந்த அமைப்புகள் கருதக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணையத்திடம் காண்டலீசா ரைஸ் அளித்த வாக்குமூலத்தில், கிளார்க் அனுப்பிய குறிப்பு ஒரு ‘நல்ல எச்சரிக்கை’ என்று தான் கருதியதாக தெரிவித்துள்ளார்.
No comments: