சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழா: தமிழை வளர்ப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு - ஜே.சி.டி.பிரபாகர் கருத்து

சென்னையில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு விஐடி நிறுவனர், வேந்தர், டாக்டர் உ.வே.சாமி நாதையர் நூல் நிலையத்தின் தலைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பங்கேற்று உரையாற்றினார். விழாவில் தமிழ் மொழிக்கு ஆற்றிவரும் தொண்டைப் பாராட்டி, தமிழ்ப் புலவர் வே.பதுமனாருக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருதும், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு டாக்டர் உ.வே.சா. விருதும் வழங்கப்பட்டன.
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும் ‘நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும்’ என்னும் நூலையும் வெளியிட்டார். விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
விழாவில் ஜே.சி.டி.பிரபாகர் பேசும்போது, “அரிய தமிழ் நூல்களை செம்மையான பதிப்புகளாக மீண்டும் வெளியிடுவது, தமிழ் அறிவு மரபைப் பாதுகாப்பதுடன், எதிர்காலத் தலைமுறையினருக்கும் அவற்றை எளிதில் கிடைக்கச் செய்யும். தமிழை வளர்ப்பது என்பது தமிழ்த் துறையின் பொறுப்பு மட்டும் அல்ல.
அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வு மையங்கள், நூலகங்கள், பதிப்பகங்கள், தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் இணைந்து செயல்படும்போதுதான் தமிழ் அடுத்த தலைமுறைக்கு முழுமையாகச் சென்றடையும்.
தமிழின் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் பாதுகாப்பது அறிஞர்களின் பணியாக மட்டும் இருக்கக்கூடாது. அது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு.
இன்றைய தலைமுறைக்கு தமிழ் நூல்களை எளிதில் கிடைக்கச் செய்வதும், அரிய நூல்களை பதிப்பிப்பதும், அவற்றை மின்னணு வடிவில் பாதுகாப்பதும், மாணவர்களிடையே தமிழாய்வை ஊக்கு விப்பதும் காலத்தின் தேவையாகும்” என்றார்.
விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “அரசியல் கட்சிகள் எப்போதும் மோதல் போக்குடன் இருக்கக்கூடாது. பொதுமக்கள் தொடர்பான முக்கியப் பிரச்சினைகளில் ஒத்துழைப்பு தேவைப்படும்போது அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இதற்கு நார்டிக் நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்தில் உள்ள அரசியல் கட்சிகளிடம் காணப்படும் ஒற்றுமையை நாம் பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.
எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், ஒத்துழைப்பு தேவைப்படும் நேரங்களில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அத்தகைய அரசியல் சூழல் மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும். தமிழகம் இந்தியாவுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்” என்றார்.
விழாவில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசும்போது, “சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் தமிழ்ச் சமூகங்கள் தொடர்ந்து தமிழ் மொழியுடனான தொடர்பைப் பேணிக் காத்து வருகின்றன.
அவர்கள் தமிழ் மொழியில் பேசுவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். தமிழகத்தில் தமிழை அனைவரும் அறிந்திருந்தாலும், சிலர் தமிழில் பேசவே தயங்குகின்றனர்.
தமிழ் மொழிதான் நமது அடையாளம். அதை நாம் பெருமையுடன் பேச வேண்டும். இன்றைய தலைமுறையினர் இடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதுடன், கவனிக்கும் திறனும் குறைந்து வருகிறது.
எனவே, தமிழ் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி, தமிழ் மொழியையும் அதன் வரலாற்றையும் இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.
விருது பெற்ற புலவர் வே.பதுமனார், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர். சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் ய.மணிகண்டன், பொருநைப் பக்கங்களின் நிறுவனர் ச.ஆவுடையப்பன், டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தின் துணைத் தலைவர் சிவாலயம் ஜெ.மோகன் ஆகியோர் பங்குபெற்று உரையாற்றினர்.
No comments: