News Just In

9/29/2026 06:49:00 AM

ஊடகவியலாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சிப் பட்டறை அக்கரைப்பற்றில்!

ஊடகவியலாளர்களுக்கானசெயற்கைநுண்ணறிவு
பயிற்சிப்பட்டறைஅக்கரைப்பற்றில்






நூருல் ஹுதா உமர்

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து, ஊடகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான ஒருநாள் பயிற்சிப் பட்டறை இன்று (28) அக்கரைப்பற்று ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது.

“AI for All – One-Day Workshop for Media Professionals” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம் மற்றும் உள்ளடக்க உருவாக்கம் உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபை மேயரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறை இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றதுடன், முதலாம் அமர்வில் பயிற்சியை நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவை நடைமுறை ரீதியாகப் பயன்படுத்துதல், AI மூலம் உள்ளடக்கங்களை உருவாக்குதல், செய்திகளைத் தொகுத்தல் மற்றும் திருத்துதல், AI அடிப்படையிலான காணொளி உருவாக்கம், சமூக ஊடக உள்ளடக்கத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும், புதுமைகளை ஊக்குவிப்பதன் ஊடாக சமூக மேம்பாட்டை முன்னெடுப்பதில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு நடைமுறையில் உதவ முடியும் என்பதுடன், AI கருவிகளை பொறுப்புடனும் அர்த்தமுள்ள வகையிலும் புரிந்துகொண்டு பயன்படுத்தும் முறைகள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் போது வளவாளர் ஏ. வினோத் தலைமையில் நடைபெற்ற அமர்வுகளில் பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டதுடன், ஊடகப் பணிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான நடைமுறை அனுபவங்களும் பகிரப்பட்டன.

இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் Range View Sri Lanka நிறுவனத்தின் பணிப்பாளருமான எஸ்.எம். தல்ஹா உள்ளிட்ட ஏற்பாட்டாளர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர். இப்பயிற்சிப் பட்டறை Range View Sri Lanka மற்றும் Curve Up Foundation ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இறுதியாக இடம் பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் பி.எம்.வை. அரபாத், அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ. ராஸீக், அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட அனுசரணையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: