சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் அவர்களின் குடும்பத்தினரை, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜனின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடப்பட்டதுடன், அவரின் விடுதலைக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
அனோஜன் மிக விரைவில் விடுதலை பெற்று தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதுடன், அவரின் விடுதலைக்காக பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தேவையான ஒத்துழைப்பையும் வழங்குவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும், இக்கட்டான சூழ்நிலையில் உள்ள அனோஜனின் குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் ஆறுதலையும் வழங்குவதுடன், அவரது விடுதலைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய தரப்பினருடன் இணைந்து முன்னெடுப்பது தொடர்பாகவும் குடும்பத்தினருக்கு உறுதியளிக்கப்பட்டது.
அனோஜன் விரைவில் விடுதலை பெற்று தனது குடும்பத்தினருடன் இணைவதற்காக தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
No comments: