News Just In

9/27/2026 05:04:00 PM

மகிந்தவுக்கு பெரும் நிம்மதி - அரகலய தாக்குதல் வழக்கில் அதிரடி திருப்பம்

மகிந்தவுக்கு பெரும் நிம்மதி - அரகலய தாக்குதல் வழக்கில் அதிரடி திருப்பம்


2022ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டாகோகம’ போராட்டக் களத்தில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டாம் என சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

‘அரகலய’ போராட்ட காலத்தில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது, மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்திருந்தார். அப்போதைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்தார்.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் கருதியதையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் பல போராட்டக்காரர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

எவ்வாறாயினும், அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், மேலும் 34 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளார்.

கண் சாட்சியங்கள், சூழ்நிலைச் சான்றுகள் மற்றும் சம்பவ இடத்தில் பதிவான காணொளிகளை நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் மற்றும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் வசந்த ஹதபாங்கொட ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
அரசியல்செய்திகளை வாசி
எனவே குற்றம் சாட்டப்பட்ட 34 பேரில் மூவர் தற்போது உயிருடன் இல்லை. மீதமுள்ள 31 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

அவர்களுக்கு எதிராக சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கொலை முயற்சி மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 327 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக மூவரடங்கிய அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட ட்ரயல்-அட்-பார் (Trial-at-Bar) நீதிமன்றத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளவர்களில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், முன்னாள் மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, முன்னாள் தெஹிவளை–கல்கிசை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் அமல் புஷ்பகுமார டி சில்வா, முன்னாள் கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் அஜந்த லியனகே, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம மற்றும் ‘அரபி வசந்த’ என அழைக்கப்படும் அசங்க நலக்க விஜேசிங்க ஆகியோரும் அடங்குகின்றனர் என்று ஆங்கில பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: