
கொங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த விடயத்தை கொங்கோ இராணுவத்தின் செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல் எபோமி எகெங்கே உறுதிப்படுத்தி உள்ளார்
இந்த விபத்து செப்டம்பர் 25, வெள்ளிக்கிழமை அன்று குவாங்கோவின் தென்மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள கெங்கே பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொங்கோவில் தென்மேற்கே கிக்வித் நகரில் இருந்து கின்ஷாசா நகர் நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அதில், லெப்டினென்ட் ஜெனரல் முதும்போ கடாளை தியண்டே மற்றும் லெப்டினென்ட் ஜெனரல் பகுமி லிகுலியா என்ற 2 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் 12 பேர் பயணித்து உள்ளனர். இந்நிலையில், கெங்கே என்ற இடத்தில் சென்றபோது, விமானம் திடீரென்று விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவத்தில் அதில் இருந்த இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேரும் பலியானார்கள். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
எனினும் இதுபற்றி விமான போக்குவரத்து கழக தலைவர் டிரைபோன் கின்-கை கூறும்போது, விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.
No comments: