News Just In

8/13/2026 06:57:00 PM

இஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனை அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க CID முடிவு

இஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனைஅரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க CID முடிவு



கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்திற்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி சந்தேக நபரை அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சுமார் ஒன்பது மாதங்களாக கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர், பொலிஸ் துறையினர் சமர்ப்பித்த விடயங்களைப் பரிசீலித்து, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம், கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.குறித்த சம்பவத்தை திட்டமிடப்பட்ட விதம், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய சந்தேக நபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான மேலதிக அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட காலப்பகுதி, பணம் பரிமாறப்பட்ட விதம் மற்றும் ஏனைய சந்தேக நபர்கள், ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் விதம் தொடர்பான தகவல்களையும் பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரணைகள் தொடர வேண்டியுள்ளதாகத் தெரிவித்த கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரின் முகத்தை சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிடும் நோக்கில் சிறப்பு முகப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக, அவரை அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி இஷாரா செவ்வந்தியை அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

No comments: