‘1,21,788 பேருக்கு வேலை வாய்ப்புகள் உறுதி’

தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று (ஆக.13) சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு தொழில் துறை தெரிவித்துள்ளது.
மேலும், ‘தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,21,788 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டு உள்ளன’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில், நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்’, தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.
2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, செல்பயோஸ், பேட்டர், ZF, HD சப்ளை, க்ரீன் சிக்னல், HL மேண்டோ, டைம்லர், வேல்முருகன் ஹெவி இன்ஜினீயரிங் மற்றும் ஜீப்ரானிக்ஸ் ஆகிய 9 தொழில் நிறுவனங்களில், பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டியில் 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டிஷ்யூ காகிதம் வணிக உற்பத்திக்கான உற்பத்தித் திட்டம் திறந்து வைக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் முதன்முறையாக டிஷ்யூ காகித உற்பத்திக்கான வணிகத்தைத் தொடங்குவதால், உலகளாவிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'லூமியா' என்ற பிராண்டின் கீழ் ஃபேஷியல், நாப்கின், டவல் மற்றும் கழிவறைப் பயன்பாட்டிற்கென நான்கு வகைகளில் உயர்தர டிஷ்யூ காகிதங்கள் வணிகப்படுத்தப்படும். இதனால் இப்பகுதியின் தொழில் வளர்ச்சியும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகலில், 250 கோடி ரூபாய் செலவிலான ஏரோஹப் வளாகத்தைத் திறந்து வைத்தார்.
சிப்காட் தொழிற்பூங்காவில் 122.08 கோடி ரூபாய் செலவிலான 11 புதிய கட்டிடங்களும், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி பிரைவேட் லிமிடெட் சார்பாக 55.66 கோடி ரூபாய் செலவிலான 2 புதிய கட்டிடங்களும் என மொத்தம் 777.74 கோடி ரூபாய் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
வர்த்தகம், வணிகம், இருதரப்பு முதலீடுகள் மற்றும் சகோதர நகர ஒத்துழைப்பு, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய துறைகளில், கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன், தமிழ்நாடு 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 67,452 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 1,06,998 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் என்னவென்றால், 55 திட்டங்கள் புதிய திட்டங்களாகவும் (Greenfield), 50 திட்டங்கள் ஏற்கனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களாகவும் (Brownfield) உள்ளன.
இன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, வேலூர், கோயம்புத்தூர், ராமநாதபுரம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தொழிற்திட்டங்கள் பரவலாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில், முதன்முதலாக தொழில் திட்டம் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டிற்குமுன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இன்றைய “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்” மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் (1,02,514 கோடி ரூபாய்) ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,21,788 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், பல்வேறு துறைச் செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments: