சத்துருக்கொண்டான் படுகொலை: பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்கிறார்கள்; குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை?
இன்றைய தினம் 07.08.2026 பாராளுமன்றத்தில், 27(2) நிலையியற் கட்டளையின் கீழ், இனப்படுகொலைகள், வலுக்கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுத மோதல்களின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரிடம் நான் கேள்விகளை முன்வைத்தேன்.
குறிப்பாக, 1990 செப்டம்பர் மாதம் மட்டக்களப்பின் சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்ற படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரினேன்.
2026 மார்ச் 20 ஆம் திகதியிட்ட இலங்கைப் பொலிஸ் அறிவித்தலின் பிரகாரம், 2026/03/20 என்ற இலக்கக் குறிப்பின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் முறைப்பாடு செய்துள்ள நபர் ஒருவர் 2026 ஆகஸ்ட் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு, புதிய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தின் 4 ஆம் மாடியில் அமைந்துள்ள கொலை விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் நான் அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை எழுப்பினேன்.
முதலாவது, 2026/03/20 இலக்கக் குறிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணையின் தற்போதைய நிலைமை என்ன? இதுவரை எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? விசாரணையின் மூலம் எந்த விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன? எத்தனை சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்? சந்தேகநபர்கள் யாரேனும் அடையாளம் காணப்பட்டுள்ளனரா? அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அல்லது விசாரணைச் சுருக்கம் சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளதா? அது தொடர்பில் ஏதேனும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளனவா?
இரண்டாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயுத மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் வலுக்கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், படுகொலைகள், பொதுமக்கள் படுகொலைகள் மற்றும் ஏனைய பாரிய குற்றங்கள் தொடர்பாக தற்போது இலங்கைப் பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பதிவேடுகளில் எத்தனை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
மூன்றாவது, அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு சம்பவத்தினதும் பெயர் அல்லது இடம்பெற்ற இடம் மற்றும் சம்பவம் நடைபெற்ற ஆண்டு ஆகிய விவரங்களைக் கொண்ட முழுமையான பட்டியலை இந்தச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா?
நான்காவது, பதிவு செய்யப்பட்டுள்ள அந்தச் சம்பவங்களில் தற்போது எத்தனை விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன? எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? மேலும், வழக்குத் தாக்கல் செய்யாமல் எத்தனை விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன?
ஐந்தாவது, ஆயுத மோதல்கள் தொடர்பாக 'Channel 4' ஆவணப்படங்களில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கைப் பொலிஸ், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அல்லது வேறு ஏதேனும் சட்ட அமலாக்க அமைப்புகளால் விசாரணைகள், குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது வழக்குத் தொடர்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அவ்வாறாயின் அவற்றின் எண்ணிக்கை என்ன?
சத்துருக்கொண்டான் பகுதியில் 1990 செப்டம்பர் 9 ஆம் திகதி 185 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால் இன்று வரை அந்தக் கொடூரச் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
1997 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் இந்தப் படுகொலை குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் விசாரணைகளில் மூன்று இராணுவத் தளபதிகள், பல அதிகாரிகள் மற்றும் ஊர்காவல் படை உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இருப்பினும், அந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.
ஆனால் இன்று, படுகொலை குறித்து முறைப்பாடு செய்த பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த நபரே மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 4 ஆம் மாடிக்கு அழைக்கப்படுகிறார்.
எனவே நான் அரசாங்கத்திடம் நேரடியாகக் கேட்கிறேன். பாதிக்கப்பட்டவர்களையே மீண்டும் மீண்டும் விசாரிப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஏன் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை? நீதி யாருக்காக தாமதப்படுத்தப்படுகிறது?
சத்துருக்கொண்டான் மட்டும் அல்ல, வடக்கு மற்றும் கிழக்கில் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை காவுகொண்ட ஏராளமான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. வவுனியா, முல்லைத்தீவு, செட்டிக்குளம், சேமமடு, உதயபுரம், யாழ்ப்பாணம் – குமுதினி படகு படுகொலை, அம்பாறை – திராய்கேணி, உடும்பன்குளம், வீரமுனை, மட்டக்களப்பு மற்றும் பல பகுதிகளில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பாக இன்றளவும் மக்கள் உண்மையையும் நீதியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
அதேபோல், திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி பிரதேசத்திலுள்ள குமாரபுரத்திலிருந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டதாக பதிவுகள் உள்ளன. ஆனால் அவர்கள் பின்னர் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை. அவர்களின் குடும்பங்கள் பல தசாப்தங்களாக பதிலின்றி காத்திருக்கின்றன.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் தனித்தனியான குற்றச் செயல்கள் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை சிதைத்த மனிதாபிமானப் பேரழிவுகளாகும். எனவே இவ்வனைத்துச் சம்பவங்களுக்கும் தொடர்பாக இலங்கைப் பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகள் என்ன? அவற்றின் முன்னேற்றம் என்ன? நீதியை நிலைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் உண்மையான அர்ப்பணிப்பு எங்கே? என்ற கேள்விகளை நான் பாராளுமன்றத்தில் எழுப்பினேன்.
இதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்சி உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது என்ற வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். அந்தக் கருத்து முற்றிலும் தவறானதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒருபோதும் உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொண்டதில்லை. மாறாக, அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதெல்லாம் அதிலுள்ள குறைபாடுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களும் உள்ளகப் பொறிமுறையைத் தெளிவாக நிராகரித்துள்ளனர். எமது நிலைப்பாடு தெளிவானது – சர்வதேசப் பொறிமுறையின் ஊடாகவே நீதியைப் பெற்றாக வேண்டும்.
எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சி இப்படிச் சொல்கிறது, அப்படிச் சொல்கிறது என்று தவறான கருத்துக்களை முன்வைப்பதற்குப் பதிலாக, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் விவாதங்கள் நடைபெற வேண்டும்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க விரும்பினால் அதனைத் தெளிவாக முன்வைக்கலாம். ஆனால் அதனை விடுத்து, மற்ற அரசியல் கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இடைக்கால நீதிப் பொறிமுறைகள் மற்றும் அரசாங்கத்தின் தீர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாங்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டத்தில் எமது நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை; இனியும் மாறப்போவதில்லை.
உண்மை வெளிப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காகவே நாம் தொடர்ந்து பாராளுமன்றத்திலும், தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளிலும் குரல் கொடுத்து வருகிறோம்.
No comments: