“குழந்தையின் ஜனாஸாவை கையிலே ஏந்தியவாறு கண்ணீர் மல்கி, படுகொலை செய்யப்படும் அளவுக்கு பச்சிளம் பாலகன் என்ன பாதகம் செய்தது என்று அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினவிடம் கேட்டேன்முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா
(ஏறாவூர் நிருபர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
“1990ஆம் ஆண்டு பிறேமதாஸாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவின் முன்னிலையில், எல்ரீரீஈ இனரால் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் பாலகனின் ஜனாஸாவை கையிலே ஏந்தியவாறு கண்ணீர் மல்கி, படுகொலை செய்யப்படும் அளவுக்கு இந்த சிசு என்ன பாதகம் செய்தது, நீங்கள் இந்த அப்பாவிகளைப் பாதுகாக்க வேண்டாமா என்று கேட்டேன். அவர் உணர்ச்சி வசப்பட்டவராக ஸ்தம்பித்துப் போய் நின்றார்.”
இவ்வாறு, 36 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின், அந்த இருண்ட காலகட்டத்தின், ஏறாவூரில் இடம்பெற்ற படுகொலைகளின்போது 121 பேர் கொல்லப்பட்ட வேதனையான நினைவுகளை நினைவு கூர்ந்தார் முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா.
நாடறிந்த அரசியல்வாதியும் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக மக்களின் அபிமானத்தைப் பெற்றவரும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் நின்று சேவையாற்றியவருமான அலிஸாஹிர் மௌலானா படுகொலைக்குள்ளானவர்களின் நினைவு நிகழ்வு பற்றி கருத்துத் தெரிவித்தார்,
அதுபற்றி மேலும் தெரிவித்த அவர்,
முஸ்லிம் சமூகம் அச்சத்திலும், நிச்சயமற்ற நிலையிலும், போதிய பாதுகாப்பின்றியும் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன, மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் “முஸ்லிம் இளைஞர்களைத் திரட்டுங்கள், அவர்களுக்கு ஆயுதங்களை தருகிறோம்” என்று எங்களுக்கு உறுதியளித்தார்.
இருப்பினும், அந்தப் பயங்கரமான, அட்டூழியங்களால் ஏற்பட்ட, தாங்க முடியாத துயரத்தையும், வேதனையையும் மீறி, எங்கள் உணர்ச்சிகள் எங்கள் முடிவுகளைத் தீர்மானிக்க நாங்கள் இடம்கொடுக்கவில்லை. முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்கும் திட்டத்தை நாங்கள் உறுதியாக நிராகரித்தோம்.
இத்தகைய நடவடிக்கை பாதுகாப்பை அளிக்காது என்பதை நாங்கள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவுக்கும் ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தினோம். மாறாக, அது அமைதியைக் குலைத்து, சமூகங்களுக்கு இடையேயான பகைமையையும், அவநம்பிக்கையையும் மேலும் ஆழப்படுத்தும்.
எங்கள் மக்கள் பெரும் அநீதிக்கும், சொல்லொணா கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு, முற்றிலும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தபோதிலும், நாங்கள் பதிலடி கொடுப்பதை விடுத்து நிதானத்தையே தேர்ந்தெடுத்தோம். நாங்கள் பொறுமையுடனும், அறிவார்ந்த ரீதியிலும் செயல்பட்டோம்.
அதுவே இன்றும் எங்கள் நிலைப்பாடாக உள்ளது, எதிர்காலத்திலும் அதுவே எங்கள் நிலைப்பாடாகத் தொடரும். நாங்கள் அமைதியைப் பேணவும், எங்கள் அண்டை சமூகங்களுடன் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும், நட்புறவுடனும் வாழவே விரும்புகிறோம்.
நாங்கள் ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும், கற்பனை செய்ய முடியாத வேதனைகளையும் சந்தித்திருந்தபோதிலும், வேறு எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்க நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.
இருப்பினும், எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அநீதி, அடக்குமுறை, அட்டூழியங்களைச் செய்பவர்கள் இறுதியில் தங்கள் வீழ்ச்சியைச் சந்திப்பார்கள். அதுவே நீதியின் விதி, அதுவே வரலாறு கற்பிக்கும் அழியாத பாடம்
No comments: