
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் ஏனைய பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால், சிறுவர்களிடையே இரு வேறு வழிகளில் நோய்கள் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகச் சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் நீரிழப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதால், போதுமான அளவு நீரை அருந்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சாதாரண வயது வந்த ஒருவர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று லீற்றர் நீரை அருந்துவது பொருத்தமானது எனக் குறிப்பிட்ட அவர், சிறுவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப போதுமான அளவு நீர் வழங்கப்படுவதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக போதியளவு நீரை அருந்தாமல் இருப்பது சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், போதியளவு நீரை அருந்தாமல் திறந்தவெளிகளில் வேலைகளில் ஈடுபடுதல் அல்லது சுற்றுலா உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வெப்ப அதிர்ச்சி, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலை உயிரிழப்புக்கும் வழிவகுக்கக்கூடியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வீட்டை விட்டு வெளியே செல்லும் போது நீர் போத்தல் ஒன்றை உடன் எடுத்துச் செல்லுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தற்போதைய காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதால், சிறுவர்களுக்கு எப்போதும் சுத்தமான குடிநீர் மற்றும் சுத்தமான உணவுகளை மட்டுமே வழங்குவதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு செயற்கை பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை வழங்குவதைத் தவிர்த்து, எலுமிச்சை, தோடம்பழம், இளநீர், கஞ்சி வகைகள் மற்றும் சூப் போன்ற இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சிறுவர்கள் கைபேசிகளைப் பயன்படுத்தி அதிக நேரத்தை செலவிடுவதற்கு இடமளிக்காமல், அவர்களை பல்வேறு உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துமாறும் சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments: