News Just In

8/18/2026 03:50:00 PM

பிரச்சினைக்கு தீர்வு இடமாற்றம் என்றால் ஒரே நாட்டில் இரண்டு சட்டங்களா ? அரசின் தீர்மானம் சரியானதா ? - ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

பிரச்சினைக்கு தீர்வு இடமாற்றம் என்றால் ஒரே நாட்டில் இரண்டு சட்டங்களா ? அரசின் தீர்மானம் சரியானதா ? - ஐக்கிய சமாதான கூட்டமைப்பு


நூருல் ஹுதா உமர்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றும் 09 முஸ்லிம் பெண்களின் சீருடை அணிதல் தொடர்பான விவகாரத்திற்கு தீர்வாக அவர்களை கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வது தொடர்பில் கடுமையான சந்தேகங்களும் கவலைகளும் எழுவதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குறித்த சுகாதார உதவியாளர்களை கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான தீர்மானம் சுகாதார அமைச்சிலிருந்து கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் 2026.08.17 அன்று தெரிவித்திருந்தார்.

அதேவேளை, 2026.08.18 அன்று பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதும் சுகாதார அமைச்சர் இதே தீர்மானத்தை உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அரசாங்கத்தின் அல்லது சுகாதார அமைச்சின் அதிகாரபூர்வ தீர்மானம் பாராளுமன்றத்திலோ அல்லது உத்தியோகபூர்வமாகவோ அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அது எவ்வாறு தெரியவந்தது என்பது தொடர்பில் விளக்கம் தேவைப்படுவதாக கலீலுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில், சுகாதார ஊழியர்களின் சீருடை தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர்கள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு முரணான வகையில் தற்போதைய நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சீருடை தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தீர்ப்போம் என்றும் அமைச்சர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட ஊழியர்களை வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வது பிரச்சினையைத் தீர்ப்பதாக அமையாது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத அடையாளத்துடன் சீருடை அணிந்து கடமையாற்ற முடியாது எனக் கூறி, குறித்த முஸ்லிம் பெண்களை கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு மாற்றுவது, ஒரே நாட்டில் ஒரே சட்டம் என்ற அடிப்படைக் கொள்கைக்கு முரணான ஒரு நிலைமையை உருவாக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அஷ்ரப் வைத்தியசாலையில் மத அடையாளத்துடன் சீருடை அணிந்து கடமையாற்ற முடியும் என்றால், கல்முனை வடக்கு வைத்தியசாலையில் மட்டும் அதற்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்? அரச நிறுவனங்களில் ஒரே சட்டமும் ஒரே நிர்வாக நடைமுறையும் அனைத்து சமூகங்களுக்கும் சமமாகப் பொருந்த வேண்டாமா?” எனவும் கலீலுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், இவ்விவகாரம் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக மாறுவதற்கு இடமளிக்காமல், அரசாங்கம் பொறுப்புடன் அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பல தசாப்த கால ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னர் அரசியல் ஜனநாயகப் பாதைக்கு வந்த தமிழ் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள், நிர்வாக ரீதியான கோரிக்கைகளை முன்வைக்கும் போது அனைத்து சமூகங்களினதும் உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, “தலைவலிக்கு தலையணையை மாற்றுவது” போன்ற இடமாற்றத் தீர்வை முன்வைப்பதற்குப் பதிலாக, பிரச்சினைக்கான நிரந்தரமானதும் சட்டரீதியானதுமான தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ள கலீலுர் ரஹ்மான், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 09 முஸ்லிம் பெண்களையும் அங்கேயே இணைத்து, அவர்களின் மத மற்றும் கலாசார அடையாளத்துடன் சட்டத்துக்கு உட்பட்டு கடமையாற்றுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டின் சட்டமும் அடையாள உரிமையும் அனைத்து சமூகங்களுக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அது இன நல்லிணக்கத்திற்கும் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

No comments: