News Just In

8/30/2026 12:31:00 PM

ஹரக் கட்டாவின் பரபரப்பு வாக்குமூலம்! சிக்கிய முன்னாள் அமைச்சரின் 5 கோடி ரூபாய் மோசடி - வெளிச்சத்திற்கு வரவுள்ள சம்பவங்கள்

ஹரக் கட்டாவின் பரபரப்பு வாக்குமூலம்! சிக்கிய முன்னாள் அமைச்சரின் 5 கோடி ரூபாய் மோசடி - வெளிச்சத்திற்கு வரவுள்ள சம்பவங்கள்



பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் முன்னாள் அமைச்சரோ அல்லது அவரது செயலாளரோ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பரான மிதிகம ருவன் அளித்த வாக்குமூலத்திலேயே இது வெளிவந்துள்ளது.

"அமைச்சரிடம் சொல்லி இந்த வேலையை முடித்துக்கொள்ளலாம், அவர் ஜனாதிபதியிடம் பேசி நடவடிக்கை எடுப்பார்" எனக்கூறி இந்த பணம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், பணம் பெற்றபோது அந்த நபர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருக்கவில்லை என்றும், ஜனாதிபதியுடன் தனக்குள்ள நெருங்கிய தொடர்பை பயன்படுத்தி இந்த வேலையை செய்வதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது முன்னாள் அமைச்சருக்கு தெரிந்தே நடந்ததா அல்லது அவருக்கு தெரியாமல் நடந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

மிதிகம ருவன் மற்றும் ஹரக் கட்டாவின் மனைவி ஆகியோரிடம் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள "பணம் கேட்கிறார்கள், பணத்தைக் கொடுங்கள்" என்று கூறியவர் ஹரக் கட்டா என்பதும் தெரியவந்துள்ளது.
பின்னணியில் நடந்த உண்மைகள்

குற்றப்புலனாய்வுத்துறையின் காவலில் இருந்தபோது, அங்கிருந்த தொலைபேசியை பயன்படுத்த ஒரு அழைப்பிற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக முறைப்பாடுகளும் உள்ளன.

இந்த வழக்கில் நதுன் சிந்தகவே முக்கிய சாட்சி என்றும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதுவரை நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் எதுவும் பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.

எனவே, ஹரக் கட்டாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலம் இலங்கை வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும், பின்னணியில் நடந்த உண்மைகள், இதில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், தொலைபேசி அழைப்புகள் என அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

No comments: